பக்கம்:பழைய கணக்கு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மாடி வீட்டு மாமா

மாம்பாக்கத்திலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள கடுகனூருக்குச் செல்ல செய்யாற்றைக் கடக்க வேண்டும். அந்த ஆற்றில் எப்போதாவது அபூர்வமாகவே வெள்ளம் வரும். சில நாட்களே ஓடும் அந்த வெள்ளம் செய்யாற்றின் ஒரு வருட அழுக்கைத் துப்புரவாக்கிவிட்டு ஓய்ந்து விடும். ஆற்று மணலில் நடந்து போய் நட்டாற்றில் ஊற்றுத் தோண்டி அதிலிருந்து அடக்கமாக வெளிப்படும் தெள்ளிய நீரில் குளித்து மகிழ்வதைப் போன்ற சுகம் ஐந்து நட்சத்திர ஒட்டல் ஸ்விம்மிங் பூலில் கிடைக்காது. நான் ஊற்றுத் தேக்கத்தில் மல்லாந்து படுத்துக் குளித்து மகிழ்வதற்காகவும் மாமா வீட்டு மாடி மீது ஏறிப்போய் ‘ஏரியல் வியூ’வில் பசுமையான கிராமத்து வயல் வெளிகளைப் பார்ப்பதற்காகவும் அடிக்கடி கடுகனூர் போய் வருவேன். அந்தக் கிராமத்தில் ஒரே ஒரு மாடி வீடுதான் உண்டு. அது என் மாமாவின் வீடு. “எங்க மாமா பெரிய பணக்காரர். மாடி வீட்டுக்காரர்” என்று மற்ற சிறுவர்களிடம் சொல்லிக் கொள்வதில் தனிப் பெருமை கொள்வேன்.

என்னிடத்தில் பற்றும் பாசமும் மிக்கவர் என் மாமா. “பையா, பையா!” என்று ஆசையோடும் அன்போடும் அழைத்துக் கொஞ்சுவார். அவருக்கு இரண்டு மனைவிமார்கள். இருவருக்குமே குழந்தைகள் இல்லாததால் மாமாவுக்கு அது பெரும் குறை. அந்தக் குறையைப் போக்க என்னிடத்தில் அளவு கடந்த பிரியம் காட்டினார். வெளியூருக்குப் போய் வந்தால் எனக்கு கிச்சிலி மிட்டாய் வாங்கி வந்து கொடுப்பார். அரிசி பெப்பர்மிண்ட்டுக்கு மேல் நான் பார்த்திராத காலத்தில் கிச்சிலி மிட்டாய் எனக்கொரு அதிசயப் பொருளாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/141&oldid=1146132" இலிருந்து மீள்விக்கப்பட்டது