பக்கம்:பழைய கணக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

செல்லும்போது என்னைக் கூப்பிட்டு ஒரு சின்னக் கிண்ணத்தில் வைத்துத் தருவார். மோர் சாதமும் நார்த்தங்காய் ஊறுகாயும் தவிர வேறெதுவும் கண்டிராத என் நாக்கு இன்னும் கொஞ்சம் தர மாட்டாரா என்று ஏங்கும். இன்றைக்கும் எங்காவது சேமியா உப்புமாவைக் கண்டால் குண்டு ஐயரின் கைவண்ணம் அடி நாக்கில் ருசி தட்டும். கண் முன்னே ஒரு விநாடி கிராமம் தோன்றி மறையும்.

சிறு வயதில் படிக்க வேண்டிய காலத்தில் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருப்பேன். மாலையில் வீடு திரும்பியதும் அப்பாவுக்கு நான் பள்ளிக்கூடம் போகாமல் ஊர் சுற்றின விஷயம் தெரிந்து போய் அடி வாங்குவதும், மறுநாள் சமாதானம் ஆவதும், மறுபடி இரண்டு நாட்களுக்குள்ளாகவே மனம் மாறி, பழையபடி ஊர் சுற்றுவதும் நிரந்தரமாகி விட்டது.

ஒரு சமயம் இது ஒரு உச்ச கட்டத்தை அடைந்த போது இந்தக் கட்டுப்பாடுகளை முழுவதுமாய் உதறிவிட்டு குண்டு ஐயர் மாதிரி சுதந்திரமாய்த் திரிய வேண்டும் என்கிற வெறி என்னுள் தோன்றியது.

ஒரு நாள் பள்ளிக்குக் கட்ட வேண்டிய அந்த மாத ஃபீஸ் பணத்தை அப்பா என்னிடம் கொடுத்தார். நான் பள்ளிக்கூடம் போகாமல், டிபன் பாக்ஸை எனக்குத் தெரிந்த ஒரு புத்தகக் கடையில் வைத்துவிட்டுக் கையில் இருந்த அந்தப் பணத்துடன் திருச்சிக்கு ரயில் ஏறி விட்டேன். சாவி என்கிற பத்திரிகையாளனின் முதல் பயணம் அப்போதுதான் துவங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/15&oldid=1145663" இலிருந்து மீள்விக்கப்பட்டது