பக்கம்:பழைய கணக்கு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூற்றுக்கு நூற்றைந்து

பஞ்சாயத்துப் பள்ளியில் ஐந்து வகுப்பு வரை படித்து முடித்ததும் கிராமத்தில் மேலே படிக்க வசதி இல்லாததால் படிப்பை அத்துடன் நிறுத்த வேண்டியதாயிற்று. பதினைந்து முடிந்து பதினாறாவது வயதைக் கடந்து விட்ட நிலையில், “வயதாகி விட்டதே! இனி எப்போது படிப்பது?” என்ற கவலை என்னைப் பிடுங்கித் தின்றது. அப்பாவுக்கு என் எதிர்காலம் பற்றிய கவலை இருப்பதாகவே தெரியவில்லை.

“பையனை ஏன் மேலே படிக்க வைக்காமல் இப்படி கிராமத்திலேயே வைத்திருக்கிறீர்கள்?” என்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் கேட்கும்போதெல்லாம் சரியான பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பிக் கொண்டிருந்தார் என் தந்தை. வெட்டிப் பொழுது போக்குவது எனக்கே பொறுக்காமல் போகவே ஒருநாள் அம்மாவிடம் வெடித்து விட்டேன்.

“என்னை ஆரணியில் கொண்டு போய் பெரியம்மாவுடம் விட்டு விடுங்கள். நான் அங்கே படிக்கப் போகிறேன்” என்று சீறினேன்.

என் தாயாரும் என் வேதனையைப் புரிந்து கொண்டு, “அப்பாவிடம் சொல்லிப் பார்க்கிறேன்.” என்றார்.

“பையன் மேலே படிக்க ஆசைப்படுகிறன். ஆரணிக்குப் போகிறானாம். ‘இங்கே குளத்தையும் குட்டையையும் எத்தனை நாளைக்குச் சுற்றிக் கொண்டிருப்பது?’ என்று கேட்கிறான். அவனே அக்கறையாகக் கேட்கும் போது அனுப்பித்தான் பார்க்கலாமே” என்று அப்பாவிடம் சொன்னார்.

“அவனுக்கு வயதாகி விட்டது. இனி படிப்பு ஏறாது. ஆரணிக்குப் போனாலும் ஊர்தான் சுற்றுவான்” என்றார் தந்தை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/154&oldid=1146149" இலிருந்து மீள்விக்கப்பட்டது