பக்கம்:பழைய கணக்கு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

களைச் செய்தோம். ஏதோ வெள்ளைக்காரனுக்கு எதிரான வெடி குண்டு தயாரிக்கிற ரகசிய தேசியவாதிகள் மாதிரி கதவை மூடிக் கொண்டு, கிசுகிசுவென்று தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டு, எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். கொட்டகையில் இருந்த மாடுகள் எல்லாம் மேய்ச்சலுக்குப் போயிருந்தன. காலையில் போகும் மாடுகள் மாலையில்தான் திரும்பி வரும். இது எங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

அட்டையையும் கத்தரிக்கோலேயும் வைத்துக் கொண்டு, கிரீடமும், புஜமும் தயாரித்தோம். பளபளவென்று இருப்பதற்காக ஜிகினா வேண்டியிருந்தது. சில பேர் கோயில் உற்சவப் பிரபையிலிருந்த ஜிகினாவைப் பிய்த்து எடுத்துக் கொண்டு வந்தோம். இன்னும் சிலர் சிகரெட் பெட்டியிலிருந்து ஜிகினா காகிதத்தை எடுத்து வந்தார்கள்.

காலையிலிருந்து மும்முரமாக ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால் எல்லாருக்கும் நேரம் ஆக ஆகப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. ஒவ்வொருவராகப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்து விடுவது என்று ஏற்பாடு.

என்னதான் ரகசியமாக ஏற்பாடு செய்தாலும் கிராமத்துப் பொடியன்களுக்கு எப்படியோ மூக்கில் வியர்த்து விட்டது. ஒவ்வொருவராக வந்து கதவைத் தட்டி, உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் எதிரில் ஏற்பாடுகளைச் செய்யும் போது கொஞ்சம் மிதப்பாகக் கூட இருந்தது.

தெருக்கூத்து என்றால் வாத்தியங்கள் வேண்டாமா?

பஜனைக் கோயிலிலிருந்து ஹார்மோனியம், மிருதங்கம், ஜால்ரா முதலியவைகளைத் தூக்கிக் கொண்டு வந்தோம். அதை ‘ஹார்மோனியம்’என்று சொல்வது கூடத் தப்பு. சுருதிப் பெட்டி; அவ்வளவுதான்.

உடைகள் ஓரளவு தயாரானவுடனேயே மேக்கப் பற்றி யோசனை எழுந்தது முன் கூட்டியே எல்லாவற்றையும் சேகரம் செய்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஒவ்வொன்றாய் முடிக்க முடிக்கத்தான் அடுத்த பிரச்சனை முன்னால் வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/159&oldid=1147337" இலிருந்து மீள்விக்கப்பட்டது