பக்கம்:பழைய கணக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அந்தத் தொழிலில் அவன் திறமைசாலி ஆயிடறான். அவ்வளவு தானே! ஜெயிலுக்குப் போய்ப் பாரேன். ஆங்கேயும் ஜாதி விகிதாசார அடிப்படையிலேதானே கைதிகள் இருக்காங்க...”

“உங்கள் கணக்குப்படி பார்த்தால் பிராமணர்களின் எண்ணிக்கை வெளியில் இருக்கும் அளவுக்கு ஏற்ற விகிதாசாரத்தில் ஜெயிலில் இல்லையே?”

“அதுக்கென்ன பண்றது? பார்ப்பான் அடிதடி சண்டை கொலை கொள்ளைக்குப் பயந்தவன். அதனால ஜெயில்ல அவங்க அதிகமா இல்லே” என்றார் பெரியார்.

பேச்சுக்கிடையில் மணியம்மையை அழைத்து, “இவங்களுக்கு காப்பி கொண்டு வந்து கொடு. ஆனந்தவிகடன்லேருந்து வந்திருக்காங்க” என்றார், வாய்ப்பை நழுவ விடாமல் நான் அப்போது அவரிடம் கேட்டேன். “இப்போது நான் உங்க வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிடுகிறேன், பார்த்தீங்களா? போன தலைமுறையில் இப்படி நடந்திருக்குமா? நான் ஆசார பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன்தான், இதற்கென்ன சொல்றீங்க?”

“இன்றைக்கு நீ என் வீட்டுக்கு வந்து காப்பி சாப்பிடுகிறாய் என்றால் அதுகூட என் பிரசாரத்தில் ஏற்பட்ட மாற்றம்தானே? ஒரு சங்கதி சொல்றேன் கேளுங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னால என் வீட்டுக்கு ஒரு பிராமணர் வந்தார். எங்கள் குடும்பத்து நண்பர் அவர். ‘ஏதாவது தாகத்துக்கு சாப்பிடறீங்களா, ஐயா!’ என்று அவரைக் கேட்டோம். ஒண்ணும் வேணாம்னு சொல்லிட்டார். நாங்க மேலும் வற்புறுத்தவே, சரி. கொஞ்சம் மோரும் தண்ணியும் இருந்தா தனித் தனியாகக் கொண்டாங்க என்றார், கொடுத்தோம். அந்த மோரில் கொஞ்சம் தண்ணியைச் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டார். அதென்னய்யா தண்ணி சேர்த்துச் சாப்பிடறீங்க”ன்னு கேட்டோம்.

‘மோரில் கொஞ்சம் தண்ணீர் கலந்து விட்டால் மோர் சுத்தமாயிடும்?’னு சொன்னர்.

‘மோர் எங்க வீட்டுது. தண்ணியும் எங்க வீட்டுது. எங்க வீட்டுத் தண்ணி எங்க வீட்டு மோரைச் சுத்தப்படுத்திடுமா? என்று பதிலுக்குக் கேட்டேன். அவர் சிரிச்சுக்கிட்டே போயிட்டார்.“

பெரியாரைப் பார்க்க நாலைந்து பேர் கூட்டமாக வெளியே காத்திருந்தார்கள். அவர்களை உள்ளே வரச் சொல்லி, “என்ன விஷயம்?” என்று கேட்டார் பெரியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/29&oldid=1145698" இலிருந்து மீள்விக்கப்பட்டது