பக்கம்:பழைய கணக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முதுகில் விழுந்த அடி!

பெல்லாரிக்குப் பக்கத்தில் இரண்டு மூன்று மைல் தள்ளி அமைந்துள்ளது அலிபுரம் சிறைச்சாலே. ஹைதர் அலி காலத்தில் யானைகளைக் கட்டிப் போட்ட இடம். ‘ப்ளாக் ப்ளாக்’காக பத்துப் பதினைந்து ப்ளாக்குகள் கொண்டது, .

‘க்விட் இண்டியா’ இயக்கத்தின் போது அங்கு சென்றவர்கள் சிறைச்சாலேக்குள் தாங்களாகவே ஆளுக்கொரு வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். எனக்குப் புத்தக ஆர்வம் நிறைய இருந்ததால் நான் கைதிகளுக்குப் புத்தகம் விநியோகம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

என்னதான் புத்தகங்கள் படித்தாலும் வெளியுலகச் செய்திகளுக்காக எல்லாருமே ஏங்கிக் கிடந்தோம். சிறைக்குள் செய்தித்தாள் வருவது தடை செய்யப்பட்டிருந்த போதிலும் வார்டர்கள் மூலம் ரகசியமாக அவற்றைத் தருவித்தோம்.

அத்தனை ப்ளாக்குகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு தினப் பத்திரிகைதான் வரும். அதிலிருந்து தலைப்புச் செய்திகளை மட்டும் எடுத்து ஒரு சிலேட்டில் எழுதி பக்கத்து பிளாக்குக்கு அனுப்பி வைப்போம். கொடுமுடி ராஜகோபாலன் இந்த வேலையைச் செய்வார். இப்படியே அது எல்லா பிளாக்குகளையும் சுற்றி வரும். ஒவ்வொரு நாளும் அரசியல் கைதிகள் நூற்றுக் கணக்கில் சிறைக்குள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் பத்திரிகைகளில் வராத சில செய்திகளைக் கொண்டு வருவார்கள். பொய்யா மெய்யா என்று தெரியாது. நம்பவும் முடியாது. நம்பாமல் இருக்கவும் முடியாது.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/34&oldid=1145705" இலிருந்து மீள்விக்கப்பட்டது