பக்கம்:பழைய கணக்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கல்கியிலிருந்து விகடனுக்கு......

சூயஸ் கால்வாய்ப் பிரச்னை பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாகப் பரபரப்போடு வெளிவந்து கொண்டிருந்த நேரம். அந்தப் பிரச்னை பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்து “சூயஸ் கால்வாயின் கதை” என்று கல்கியில் ஒரு கட்டுரை எழுதினேன். ராஜாஜியே மகிழ்ந்து பாராட்டிய கட்டுரை அது. ஆனந்த விகடன் அதிபர் திரு எஸ். எஸ். வாசன் அவர்களும் அதைப் படித்துப் பாராட்டியதாய்க் கேள்விப்பட்டேன். அச்சமயம் கல்கி ‘சாமா’வை அவர் ஏதோ ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்தித்துப் பேசிய போது நான் கல்கியில் எழுதியிருந்த “மாறு வேஷத்தில் மந்திரி” என்ற நகைச்சுவைக் கட்டுரையைக் குறிப்பிட்டுப் பேசியதோடு, “சாவி முழுக்க முழுக்க நகைச்சுவை எழுத்தாளராயிற்றே! அவர் எழுத்து விகடனுக்குத்தானே பொருத்தமானது!” என்றும் கூறியிருக்கிறர். மறுநாள் சாமா என்னிடம் இதையெல்லாம் சொல்லி, “வாசனுக்கு உன்னை அங்கே அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்குமோ, என்னவோ? எதற்கும் நீ அவரைப் போய்ப் பாரேன்” என்றார்.

அடுத்த வாரமே நான் திரு வாசன் அவர்களைப் போய்ப் பார்த்தேன்.

மாடியிலிருந்தவர் கீழே இறங்கி வந்து என்னோடு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாகத் தமிழ்ப் பத்திரிகைகள் வளர்ச்சி பற்றிப் பேசினோம். ஆனந்த விகடன் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காகச் சில தூண்டில் வார்த்தைகளை வீசினர். தெரிந்து கொண்டார்.

“ஆமாம்; முன்பு நீ ஆனந்த விகடனில் வேலை செய்து கொண்டிருந்தாயல்லவா? அப்புறம் ஏன் விகடனே விட்டு விலகி விட்டாய்?” என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/37&oldid=1145711" இலிருந்து மீள்விக்கப்பட்டது