பக்கம்:பழைய கணக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

கொண்டிருப்பவர்கள், ‘உன் உதவி ஆசிரியருக்கு இவ்வளவு சம்பளம் கொடு’ என்று சொல்வது என்ன நியாயம்?” என்பது அவர் வாதம்.

எனவே ‘வேஜ் போர்’டின் சிபாரிசுகளே ஆட்சேபித்து அந்த வாரம் தலையங்கம் எழுத வேண்டும் என்று திரு வாசன் கூறினார். அதற்கான காரணங்களையும் எடுத்து விளக்கி விட்டுப் பின்னர் ஒவ்வொருவரின் அபிப்பிராயத்தையும் தனித்தனியே கேட்டுக் கொண்டு வந்தார். என்னைத் தவிர மற்ற அத்தனை பேரும் அநேகமாக வாசனின் யோசனையை ஒட்டியே தங்கள் கருத்தைத் தெரிவித்தனர்.

என் முறை வந்த போது, “நீ என்ன சொல்கிறாய்?” என்பது மாதிரி என்னைப் பார்த்தார்.

“இதற்காக ஒரு தலையங்கம் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்” என்றேன் நான். திரு வாசன் அவர்களுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை நான் சொன்ன போது மற்றவர்கள் ஒருவரையொருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டார்கள்.

எனக்கும் கூடக் கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஏனெனில் அப்போதுதான் நான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தேன். இப்படிப் பேசலாமோ, கூடாதோ என்று பயம் இருந்தாலும் நம் கருத்தைக் கேட்கும் போது உண்மையாக என்ன நினைக்கிறோமோ அதைச் சொல்வதுதானே முறை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

நான் ‘எழுதக் கூடாது’ என்று சொன்னதும் திரு வாசன் அவர்கள் என்னைச் சற்று வியப்போடு நோக்கினார். அறையில் ஒரு கப்சிப் மெளனம் நிலவியது.

“ஏன் கூடாது என்கிறாய்?”

“வேஜ் போர்டின் சிபாரிசுகள் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் அது உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள சண்டை. விகடன் வாசகருக்கு இதில் அக்கறை இருக்க முடியாது. நீங்கள் உங்கள் உதவி ஆசிரியருக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்து ஒன்றும் ஆகப் போவதும் இல்லை. பொதுஜன அபிப்பிராயத்தைத் திரட்ட வேண்டிய அவசியமும் இந்தப் பிரச்னையில் இல்லை” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/44&oldid=1145986" இலிருந்து மீள்விக்கப்பட்டது