பக்கம்:பழைய கணக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

கேட்டுக் கொண்டதற்குக் காரணம் வேறு. தான் ஒரு காலத்தில் அமர்ந்திருந்த நாற்காலியில் இன்னொருவன் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் யாருக்கும் மிகச் சிறிதேனும் சங்கடம் ஏற்படக் கூடும். அந்தச் சங்கடத்தை துமிலன் அவர்களுக்குத் தந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்திலேயே அப்படிச் சொல்லி வைத்திருந்தேன். இது பற்றி துமிலன் என்ன நினைத்தார் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பின்னொரு சமயம் ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற என் மணிவிழாவின் போது அவரை மேடைக்கு அழைத்து, ஒரு மாலையை எடுத்து கலைஞர் அவர்களிடம் தந்து துமிலனுக்குப் போட்டு கௌரவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அந்த வகையில் எனக்கு அவரிடமுள்ள மரியாதையைத் தெரியப்படுத்தினேன்.

நான் ‘குங்குமம்’ பத்திரிகைக்குப் போன பிறகு சில மாதங்கள் கழித்து துமிலன் அவர்களிடமிருந்து எனக்கு ஒரு காட்டமான கடிதம் வந்தது, கதிரில் நான் இருந்தபோது, என்னைப் பார்க்கக் கூட அவரை அனுமதிக்கவில்லையாம். என் போக்கை மிகவும் கண்டித்து அவர் காரசாரமாய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்படியொரு அபிப்ராயம் என் மீது தோன்றும் வகையில் அவர் மனதைக் கலைத்தவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட ஒரு கடிதத்தை நான் அவரிடமிருந்து கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, அதைப் படித்ததும் அரைமணி நேரம் என்னால் வேறு எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

என் நிலையை விளக்கி மிகவும் பவ்யமாக நாலு பக்கங்களில் ஒரு பதிலை நான் துமிலன் அவர்களுக்கு எழுதிப் போட்டேன். அதற்குப் பின் அவரிடமிருந்து எனக்கு எந்தக் கடிதமும் இல்லை. எனக்கும் அவருக்குமிடையே அப்புறம் தொடர்பு இல்லாமலேயே இருந்து வந்தது.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் நண்பர் பி. வி. ஆர். வீட்டுத் திருமணத்துக்கு நான் போயிருந்த போது அங்கே துமிலன் அவர்களும் வந்திருந்தார். என்னைக் கண்டதும் அவரே என் அருகில் வந்து மிகவும் அக்கறையோடு என்னைப் பற்றியும், சாவி பத்திரிகையின் வளர்ச்சி பற்றியும் விசாரித்தார். என் மீது கொண்டிருந்த தவறான அபிப்ராயத்தை அவர் மாற்றிக் கொண்டு விட்டார் என்பதை அவர் பேச்சிலிருந்து உணர்ந்தேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. இப்போதும் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/48&oldid=1145990" இலிருந்து மீள்விக்கப்பட்டது