பக்கம்:பழைய கணக்கு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான் ஒரு பத்திரிகாசிரியனாக வர வேண்டும் பிள்ளையாரப்பா!

சென்னை நகரம் முதன் முதலாக என்னைத் தரிசித்தபோது எனக்கு வயது பன்னிரண்டு. டிராம் வண்டிகளும் ஜட்கா வண்டிகளும் முறையே நகர்ந்து, ஓடிக் கொண்டிருந்த காலம். பஸ்களை எப்போதாவது அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். சென்னை நகரம் என்பது அப்போது சில பேட்டைகள் அடங்கிய ஒரு பெரிய கிராமம்தான். இவ்வளவு கொசு கிடையது. ராக்ஸி தியேட்டர், கினிமா ஸெண்ட்ரல், வெலிங்டன், கெயிட்டி, ஸ்டார் டாக்கீஸ், பிராட்வே இந்த ஆறு தியேட்டர்களும் அப்போது என்னைப் போலவே வாலிபமாயிருந்தன.

நான் கிராமத்துப் பள்ளி வரை படித்து முடித்திருந்தேன், அந்தப் படிப்பைப் பயன்படுத்தி, பத்திரிகைகள் படித்துப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொண்டேன். சிறு வயது முதலே பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் இருந்து வந்தது. ஆனந்த விகடன்தான் அந்த ஆர்வத்தைத் தூண்டி விட்டது.

பின்னால் என் வாழ்க்கை பத்திரிகையோடுதான் இறுக்கமாக இணையப் போகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியாத நாட்களிலேயே, “நான் ஒரு பத்திரிகை ஆசிரியனாக வரவேண்டும் பிள்ளையாரப்பா” என்று என் கிராமத்து வினாயகப் பெருமானிடம் தினம் தினம் வேண்டிக் கொண்டு தலையில் குட்டிக் கொண்டு, தோப்புக்கரணம் போட்ட நாட்கள் என் நினைவிலிருந்து அகலவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/49&oldid=1145991" இலிருந்து மீள்விக்கப்பட்டது