பக்கம்:பழைய கணக்கு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

சென்னைக்கு முதன் முதல் வந்ததும் பவழக்காரத் தெருவில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அவர் ஒரு வழக்கறிஞர். எனக்குள்ள பத்திரிகை ஆர்வத்தைப் புரிந்து கொண்டு தம் பீரோவில் அடுக்கி வைத்திருந்த விகடன் இதழ்கள் சிலவற்றை எடுத்து எனக்குப் படிக்கக் கொடுத்தார். அத்துடன் என்னிடம் இரண்டு நாலணாக் காசுகளை தந்து, “பையா, இந்தா! மூர் மார்க்கெட், ஜூ எல்லாம் பார்த்துவிட்டு வா” என்றார்.

‘ஜிவ்’ வென்று எழும்பி வானத்தில் சிறிது நேரம் சஞ்சரித்து விட்டுப் பூமிக்குத் திரும்பி வந்தேன். காரணம், என் வயதுப் பையனுக்கு எட்டணா கிடைப்பது என்பது அப்போதெல்லாம் அத்தனை எளிதல்ல!

அப்போது தீபாவளி முடிந்து இருபது நாட்களே ஆகியிருந்தன. சில கடைகளில் இன்னமும் பட்டாஸ் விற்றுக்கொண்டிருந்தார்கள். கையிலிருந்த எட்டணா, பட்டாஸ் வாங்கத் தூண்டிப் படாத பாடு படுத்திற்று, அச்சமயம் ஆனந்த விகடன் தீபாவளி மலர் வெளியாகியிருந்தது. விலை நாலணா. ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. எப்படியும் அந்த மலரை வாங்கிப் படித்து விட வேண்டும் என்று கொள்ளை ஆசை!

244, தங்கசாலைத் தெருதான் அப்போது விகடன் அலுவலகத்தின் முகவரி. பவழக்கார வீதியிலிருந்து செக்குமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகில் பிராட்வேயைக் குறுக்கில் கடந்து கினிமா ஸெண்ட்ரல் பக்கம் (இப்போது முருகன் தியேட்டர்) போனால் தங்கசாலை வரும் என்று வக்கீல் மாமா வழி சொல்லிக் கொடுத்தார். சொன்ன வழியைப் பின்பற்றி நடந்தே போய் விட்டேன்.

விகடன் அலுவலகம் என்பது ஒரு சின்ன வீடு. வாசலில் ஒரு பெரிய திண்ணையும் ஒரு குட்டித் திண்ணையும் இருந்தன. தெருவில் இருந்த குப்பைத் தொட்டியில் கிடந்த தாள் ஒன்று கண்ணில் பட்டது. வரப்போகும் விகடன் இதழுக்கான அச்சான பாரம் அது. மை அதிகமாகிப் போய் கசக்கி எறியப்பட்ட நிலையில் அந்தக் குப்பைத் தொட்டியில் கிடந்தது. அதை ஒழுங்காக மடித்து இடுப்பில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன். புதையல் கிடைத்த பெருமை! அந்தக் காலத்து வீட்டு அமைப்பின்படி வாசற்படியைக் கடந்ததும் ரேழி. அப்புறம் ஒரு சின்னக் கூடம். அங்கே இரு தூண்கள். பின்பக்கம் சமையலறை.

வலது பக்கம் இருந்த கூடத்துத் தூணுக்கும் சுவருக்கும் இடையே ஒரு சின்ன மேஜை. கதர்ச் சட்டை அணிந்த ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/50&oldid=1145992" இலிருந்து மீள்விக்கப்பட்டது