பக்கம்:பழைய கணக்கு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தியேட்டர்காரர்கள் எனக்கு சினிமா பார்க்க ‘போர்ட் பாஸ்’ தருவார்கள். இதுதான் அந்த ஏற்பாடு. வாரம் ஒரு முறை தியேட்டர்களிலிருந்து போஸ்டர் பெற்று வந்து கூழ் காய்ச்சி, தட்டியில் ஒட்டி அவற்றை எடுத்துக் கொண்டு போய் அந்தந்த இடத்தில் வைக்க வேண்டியது என் வேலை. இதை மிக உற்சாகத்தோடு செய்து வந்தேன்.

போர்டு எழுதும் தொழிலில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ‘நாடோடி’ என்று ஒரு வாரப் பத்திரிகை தொடங்கினேன். விலை காலணாதான். ஐந்நூறு பிரதிகளே அடிக்க பேப்பர் விலை, அச்சுக் கூலி எல்லாமாகச் சேர்ந்து ஐந்து ரூபாய்தான் செலவாகும். பிரதிகள் அச்சானதும் நூறு நூறாக எடுத்துக் கொண்டு போய் முக்கியமான பஸ் ஸ்டாப்புகளில், ‘நாடோடி நாடோடி’ என்று நானே கூவி விற்பேன். காலணா என்பதால் ஒரு மாலைப் பொழுதுக்குள் நூறு பிரதிகளும் காலியாகிவிடும்.

ஒரு நாள் திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டில் வழக்கம் போல ‘நாடோடி நாடோடி’ என்று குரல் கொடுத்துக் கொண்டே என் பத்திரிகையை விற்றுக் கொண்டிருந்த போது பஸ்ஸுக்குள் இருந்து ஒருவர் கையை நீட்டி, “ஒரு நாடோடி கொடப்பா” என்று வாங்கிக் கொண்டார். பணம் வாங்கும்போது தான் அவர் என் தந்தை என்று தெரிந்தது. என் தாயாரும் அவர் அருகில் உட்கார்ந்திருந்தார். நான் ஏதோ பத்திரிகை நடத்துகிறேன் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஆனால் அதை பஸ் ஸ்டாண்டில் கூவி விற்பதும் நானேதான் என்பதை அறிந்த போது அவர்கள் என்ன நினைத்தார்களோ, தெரியவில்லை. அங்கிருந்து அவசரமாக நழுவி அடுத்த பஸ் பக்கம் மறைந்து விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/53&oldid=1145995" இலிருந்து மீள்விக்கப்பட்டது