பக்கம்:பழைய கணக்கு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பிரம்மசாரி காமராஜ்

“தமிழ்நாட்டு மக்களிடையே நல்ல பண்புகளும் பழக்க வழக்கங்களும் வளர வேண்டுமானால் அவற்றைப் போதிக்கும் நமது புராண, இதிகாசக் கதைகளைக் கதா காலட்சேபம், நாடகம் இவற்றின் வாயிலாகப் பட்டி தொட்டியெங்கும் பரப்புகின்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்ற யோசனையை ஒரு சமயம் திரு எம். பக்தவத்சலம் அவர்கள் திருவையாற்றில் வெளியிட்டார்.

காமராஜ், முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி, கட்சி வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில் அவருடன் ஒரு முறை டெல்லி போயிருந்தேன். டெல்லியில் தமிழ்நாடு ஹவுஸில் தங்கியிருந்தோம். பகலெல்லாம் அவருடன் சுற்றி அலைந்த களைப்பு மேலீட்டால் நான் குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்து விட்டேன். சில நிமிடங்களில் என்னை யாரோ தட்டி எழுப்பினார்கள். திடுக்கிட்டு எழுந்து பார்த்தால் காமராஜ்!

“சரியாப் போச்சு. நான்தான் குறட்டை விடுகிறவன்னா நீங்க எனக்கு மேலே சத்தமா விடரீங்களே! எழுந்து போய் பக்கத்து ரூமிலே படுத்துக்குங்க. அப்பத்தான் நானும் நல்லாத் தூங்கலாம். நீங்களும் நல்லாத் தூங்கலாம்” என்று சொல்லி லேசாகச் சிரித்தார்.

மறுநாள் காலை டைனிங் ஹாலில் அவரோடு பேசிக் கொண்டிருந்த போது திரு பக்தவத்சலம் வெளியிட்டிருந்த யோசனையைப் பற்றிப் பிரஸ்தாபித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/54&oldid=1145996" இலிருந்து மீள்விக்கப்பட்டது