பக்கம்:பழைய கணக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

“ஆமாம்; நல்ல யோசனைதான். அதற்கு என்ன செய்யலாம்னு நினைக்கிறீங்க?” என்று கேட்டார்.

“கிருபானந்த வாரியார் அவர்களைக் கொண்டு ராமாயண விரிவுரையும் எஸ். வி. சகஸ்ரநாமத்தைக் கொண்டு அரிச்சந்திரா போன்ற நீதி நாடகங்களையும் தமிழ்நாடு முழுதும் நடத்திப் பார்க்கலாம். முதலில் சென்னையில் ஆரம்பித்து அப்புறம் தமிழ்நாடு முழுதும் இதைத் தொடரலாம்.” என்றேன்.

அவர் மெளனமாக யோசிக்கலானர்.

“நானே இந்தப் பொறுப்பேற்றுச் செய்யட்டுமா?” என்று இழுத்தாற்போல் தயக்கத்தோடு கேட்டேன்.

“தாராளமாச் செய்யுங்க. ஒரு கமிட்டி அமைச்சுக்குங்க. அதில காங்கிரஸ்காரங்க யாரையும் சேர்த்துடாதீங்க” என்றார் காமராஜ்.

“அப்படியானால் முதலில் தாங்கள் எனக்குச் சில வசதிகள் செய்து தரவேண்டும். முக்கியமாக, நிகழ்ச்சிகள் நடத்த தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் தேவைப்படும்” என்றேன்.

“சரி, ராமண்ணா கிட்ட சொல்லிடறேன்; நீங்க ஆரம்பியுங்க” என்றார்.

சென்னை திரும்பியதும் இதற்காக ஒரு கமிட்டி அமைத்தேன். வீனஸ் ரத்னம் ஐயர், லிப்கோ சர்மா போன்ற பெரிய மனிதர்களையெல்லாம் அதில் பிடித்துப் போட்டேன். கிடுகிடுவென்று வேலே ஆரம்பமாயிற்று. ‘சத்ய சபா’ என்று வாரியார் அதற்குப் பெயர் சூட்டினார். கமிட்டிக்கு காமராஜ் அவர்களை தலைவராக இருக்க ஒப்புக் கொண்டதுடன் முதல் கூட்டத்துக்கு வந்து சில யோசனைகளும் வழங்கினார். சகஸ்ரநாமம் நாடகங்களுக்கு டிக்கட் வைக்கக் கூடாது. எல்லோரும் இலவசமாக நாடகம் பார்க்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.

காங்கிரஸ் மைதானம் அமர்க்களப்பட்டது. ஏவி. எம். அவர்கள் முகப்பு வாயிலை அலங்கரித்துக் கொடுத்தார். வாசன் அவர்கள் ‘ஔவையார்’ படத்துக்காகச் செய்த மிகப் பெரிய பிள்ளையார் உருவச்சிலையை அனுப்பி உதவினார். காங்கிரஸ் மைதானத்தின் நுழைவாயிலில் அதை வைத்து, பக்கத்தில் ஒரு உண்டியும் வைத்தோம். அதன் மூலம் அன்றாடம் கிடைத்த வரும்படியே அன்றாடச் செலவுக்குப் போதுமானதாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/55&oldid=1145997" இலிருந்து மீள்விக்கப்பட்டது