பக்கம்:பழைய கணக்கு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

வாரியார் ராமாயணக் கதை நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இடை இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் சகஸ்ரநாமம் நாடகங்கள். கூட்டமாவது கூட்டம். கதை ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியும் காமராஜ் கதை கேட்க வராதது வாரியாருக்கு ரொம்பக் குறையாக இருந்தது. நானும் தினமும் காமராஜ் அவ்ர்களைச் சந்திக்கும் போதெல்லாம், “எப்போது கதை கேட்க வரப் போகிறீர்கள்?” என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

“என்னை தினமும் அழைக்கணுமா என்ன? நானே வந்துடறேன். மெட்ராஸில் இருக்கச்சே டைம் கிடைக்கிற நாளெல்லாம் வந்துடறேன்” என்றார்.

ஒருநாள் திடீரென்று காமராஜ் வருவதாக எனக்குத் தகவல் சொல்லி அனுப்பினார். கதைக்கிடையில் வாரியாரிடம் போய் அவர் காதோடு இதைச் சொன்னேன். அவருக்குப் பரம சந்தோஷம். அன்று அனுமானுடைய ஆற்றலைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தவர் வழக்கம் போலக் கிளைக் கதைகள், உபமானங்கள் என்று கூட்டத்தைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்.

“தன்னிடம் எந்தக் காரியத்தை ஒப்படைத்தாலும் அதை வெற்றிகரமாகச் சாதிக்கக் கூடியவர் அனுமார். காரணம்? அவர் ஒரு பிரம்மசாரி. பிரம்மசாரிகள்தான் தங்களிடம் ஒப்படைக்கப்படும் பொறுப்புகளைச் சரியாகச் செய்யக் கூடிய ஆற்றலும் வல்லமையும் பெற்றவர்கள். அந்தக் காலத்தில் மட்டுமல்ல. இந்தக் காலத்திலும்தான்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காமராஜ் அவர்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் கூட்டத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் தோன்றியது. ரொம்பவும் அருமையாக டைம் கொடுத்து, “நான் பிரம்மசாரி என்று சொன்னது யார் என்பது உங்களுக்கெல்லாம் புரிகிறது. அதனால்தான் நீங்கள் எல்லோரும் அதை ரசித்துச் சிரிக்கிறீர்கள்” என்று வாரியார் கூறியதும் அந்தச் சிரிப்பு பேரலையாக மாறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/56&oldid=1145998" இலிருந்து மீள்விக்கப்பட்டது