பக்கம்:பழைய கணக்கு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சின்ன அண்ணாமலை மார்க்கெட்

நல்ல காய்கறிகளின் மீது எனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம், பத்திரிகை விற்பனைக் கடைகளையோ, காய்கறிக் கடைகளையோ எங்காவது கண்டு விட்டால் என் கால்கள் தாமாகவே அங்கு நின்று விடும். காய்கறிகளை நானே வாங்கி வந்து, நானே நறுக்கிக் கொடுத்து, அவற்றைச் சமைக்கச் சொல்லிச் சாப்பிடுவதில் தனிப் பிரியம். நான் வேலை இல்லாமல் இருந்த நாட்களில் எனக்குத் தோன்றிய பல யோசனைகளில் ‘கறிகாய் வியாபாரம்’ செய்தால் என்ன? என்பதும் ஒன்று. வியாபாரத்துக்கு வியாபாரம், வீட்டுக்கும் காய்கறி கிடைத்த மாதிரி இருக்குமே!

அப்போது தியாகராய நகர் பனகல் பார்க் எதிரில் தமிழ்ப் பண்ணை அலுவலகம் இருந்தது. அந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் கொட்டகை போட்டுக் கொண்டு நானும் சின்ன அண்ணாமலையும் அங்கே கட்டாத மனக்கோட்டைகள் இல்லை!

அந்த நாட்களில், ஊஸ்மான் ரோடும், துரைசாமி ரோடும் சந்திக்கும் இடத்தில் தெருவோரம் உள்ள பிளாட்பாரங்களில் சிறு சிறு வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். பாதசாரிகளுக்கும் வண்டிப் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாய் இருப்பதாகச் சொல்லி போலீஸார் அவர்களை தினமும் விரட்டி அடிப்பார்கள். அடிக்கடி போலீஸ் வான் வந்து அத்தனை காய்கறிக் கூடைகளையும் தூக்கிப் போட்டுத் கொண்டு போய்விடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/57&oldid=1145999" இலிருந்து மீள்விக்கப்பட்டது