பக்கம்:பழைய கணக்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

வேண்டுமானலும் நிறுத்தி விடும் உரிமை எனக்கு உண்டு. நான் சொல்லும் வரை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். நீங்களாகவே நிறுத்தி விடக் கூடாது” என்றேன்.

“அது முழுக்க முழுக்க உங்கள் உரிமை. அதில் நான் தலையிட மாட்டேன்” என்று எம். ஜி. ஆர். உறுதி அளித்தார்.

கதிரில் இரண்டு மூன்று வாரங்கள் விளம்பரம் செய்தேன். அதன் பலனாய் அலுவலகத்துக்கு வந்து குவிந்த வாசகர்களின் கேள்விகளை சாக்குப் பையில்தான் மூட்டை மூட்டையாகக் கட்டிவைக்க வேண்டியதாயிற்று. ஒரு தனி மனிதரின் பதிலுக்காக அப்போது வந்த கடிதங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் பத்திரிகை வாழ்வில் நான் எங்கும் கண்டதில்லை.

ந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பெரம்பூரில் ஒரு சாபாவின் ஆதரவில் நான் எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் நாடகக் குழு நடத்தியது. அன்றைய நிகழ்ச்சிக்கு எம்.ஜி. ஆர். தலைமை தாங்கினார். அந்தக் கதையை எழுதியவன் என்ற முறையில் என்னையும் நாடகத்துக்கு அழைத்திருந்தார்கள். நான் வருவதாகச் சொல்லியிருந்த போதிலும் போக முடியாதபடி இக்கட்டான ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

ரொம்ப நாளாகவே காமராஜ் அவர்கள் என் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர் அன்று பார்த்து வருவதாகத் தகவல் அனுப்பிவிட்டார். அவர் வருவதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதியதால் சபாக்காரர்களுக்கு நிலைமையை விளக்கிக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன். “தமிழகத்தின் ராக்பெல்லரான திரு எம்.ஜி.ஆர். அவர்களே விழாவுக்கு வரும்போது பிறகென்ன?” என்று நகைச்சுவையாக அதில் எழுதியிருந்தேன். விழாவின்போது என் கடிதத்தை மைக்கில் படித்து விட்டார்கள். காமராஜ் வீட்டுக்கு வருவதால்தான் நான் வரவில்லை என்பது எம். ஜி. ஆருக்கும் தெரிந்து விட்டது. ஆனால் அது பற்றி அவர் என்ன நினைத்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆகஸ்டு 14-ம் தேதி இரவு எட்டரை மணிக்கு என் வீட்டுக்கு வந்த காமராஜ் மறுநாள் காலை 3-30 மணிக்குத்தான், அதாவது ஆகஸ்ட் 15-ம் தேதிதான் திரும்பிப் போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/68&oldid=1146010" இலிருந்து மீள்விக்கப்பட்டது