பக்கம்:பழைய கணக்கு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

என் அழைப்பின் பேரில் அன்று ‘சோ’ வும் என் வீட்டுக்கு வந்திருந்தார். நாங்கள் இருவரும் அன்று இரவு நாட்டு நடப்பு பற்றி திரு காமராஜ் அவர்களோடு விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்புறமும் எம். ஜி. ஆர். பதில்கள் கதிரில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அவர் தம்முடைய பதில்கள் சிலவற்றில் சோ அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தார். நான் அவற்றைப் பிரசுரிக்கவில்லை. அரசியல் கருத்துக்கள் எப்படியிருந்தாலும் சோவும் என்னைப் போல் ஒரு பத்திரிகை ஆசிரியர் என்பதால் அவரைத் தாக்கி எழுதும் பதில்களை என் பத்திரிகையில் வெளியிடுவது முறையல்ல என்று எனக்குத் தோன்றியது. எனவே எம்.ஜி.ஆர். சோவைத் தாக்கி எழுதியிருந்த பதில்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு மற்றவற்றைப் பிரசுரித்து வந்தேன்.

நாலைந்து வாரங்கள் கழித்து வித்வான் லட்சுமணன் என்னிடம் வந்தார். “எம். ஜி. ஆர். எழுதும் பதில்களில் சிலவற்றை நிறுத்தி விடுகிறீர்களே, எல்லாவற்றையுமே வெளியிட்டால் தேவலை” என்றார்.

“சோவைத் தாக்கி எழுதும் பதில்களைத்தானே சொல்கிறீர்கள்? அவற்றை நான் பிரசுரிப்பதற்கில்லை. மன்னிக்க வேண்டும்” என்றேன். “இல்லை, எம். ஜி. ஆர். எதிர்பார்க்கிறார். அதெல்லாம் அவருடைய கருத்துதானே? எல்லாவற்றையும் போட்டு விடுங்களேன்?” என்றார். வித்வான் லட்சுமணனின் தர்மசங்கடம் எனக்குப் புரிந்தது.

இது பற்றி நானும் எம்.ஜி.ஆரும் சந்தித்துப் பேசுவது நல்லது என்று எனக்குத் தோன்றியதால் வித்வானிடம், “நான் எம். ஜி. ஆரைப் பார்த்துப் பேசட்டுமா?” என்று கேட்டேன்.

“ரொம்ப நல்லது” என்றார் வித்வான்.

அதன்படி எம். ஜி. ஆரை ஒரு நாள் சந்திக்கப் போயிருந்தேன்.

கோடம்பாக்கம் ஸ்டுடியோ ஒன்றில் அவர் இருந்தார். ஏதோ சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. நான் போய் ஒரு மணி நேரமாகியும் எம்.ஜி.ஆர். என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. பார்த்துவிட்டுப் பேசாமலேயே இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/69&oldid=1146012" இலிருந்து மீள்விக்கப்பட்டது