பக்கம்:பழைய கணக்கு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

நானாக வலியச் சென்று பேசியபோது ஒரே வார்த்தையில் பதில் சொன்னார். ஏதோ கோபம் என்று மட்டும் புரிந்து கொண்டேன். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. ஆனாலும் அரைமணி நேரம் பொறுமையோடு உட்கார்ந்து ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஷூட்டிங் கலைந்த பிறகும் அவர் என்னிடம் பேசத் தயாரில்லை என்பது தெரிந்தது. “இங்கே இவரை ஏன் பார்க்க வந்தோம்?” என்று எனக்கு நானே நொந்து கொண்டேன். கடைசியில், “நான் போய் வருகிறேன்” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்ட போதுகூட அவர், “எதற்காக வந்தீர்கள்? ஏன் போகிறீர்கள்?” என்று என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.

என் மீது எம். ஜி. ஆர். கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கோபம் எதனால் என்பது விளங்கவில்லை. இரண்டு காரணங்களுக்காக அவர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஒன்று அவரைவிட நான் காமராஜருக்கு முக்கியத்துவம் தந்து அவர் தலைமை வகித்த நாடக நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்ததாயிருக்கலாம். அல்லது சோ பற்றி அவர் எழுதிய பதில்களைப் பிரசுரிக்காமல் விட்டதாயிருக்கலாம். இவை இரண்டில் எது அவருக்குக் கோபமூட்டியது என்பது அவருக்குத்தான் தெரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/70&oldid=1146013" இலிருந்து மீள்விக்கப்பட்டது