பக்கம்:பழைய கணக்கு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

கேட்டு வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தேன். அந்த மாமி என்னை எதுவுமே விசாரிக்கவில்லை. சமையல்காரர் கையில் எண்ணெய் தடவிக்கொண்டு பலாப்பழம் நறுக்கிச் சுளை சுளையாகப் பாத்திரத்தில் போட்டார். ஒன்றை எடுத்து ‘இந்தா சாப்பிடு’ என்று என்னிடம் தந்தார். நாக்கில் ஒரு குடம் ஜலம் ஊறிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த வீட்டு மனிதர்களில் ஒருவனாகி விட்டேன். எப்படியும் சாப்பாடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை பிறந்தது!

பந்தி பரிமாறத் தொடங்கியதுதான் தாமதம், நானும் மற்றவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து விட்டேன். என்னை யாரும் எதுவும் கேட்கவில்லை. வடை பாயசத்தோடு வயிறு புடைக்கச் சாப்பிட்டு முடித்தேன். “அப்பாடா! இன்னும் இருபத்துநாலு மணி நேரத்துக்குக் கவலை இல்லை” என்று எண்ணிக் கொண்டேன். இப்போது உண்ட மயக்கம். மெதுவாக வெளியே புறப்பட்டு, வாசல் படியைத் தாண்டும் போது ஒரு கனமான குரல் “அம்பி இங்கே வா!” என்று சற்று அதட்டலாக அழைத்தது.

என் சப்த நாடியும் அடங்கிப் போயிற்று. சரி, முதுகிலே இரண்டு அறை வைத்து, “திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து சாப்பிடுகிறாயா? யாருடா நீ?” என்று கேட்பாரோ என்று நடுங்கியபடியே அவர் அருகில் போய் நின்றேன்.

“இந்தாடா! வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு போ” என்று சொல்லி ஒரு தட்டை நீட்டினார் அவர். அந்த வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டேன். அதில் நாலணாக் காசு இருந்தது. சாப்பிட்டதற்கு தட்சிணை!

அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் ஆண்டவன் படி அளந்து விட்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/73&oldid=1146016" இலிருந்து மீள்விக்கப்பட்டது