பக்கம்:பழைய கணக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சத்ய சபாவில் கற்ற பாடம்

“பக்திச் சொற்பொழிவுகள் மூலமே நாட்டு மக்களை நல்வழிப் படுத்த முடியும். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து விட்டுத்தான் காந்திஜி கூட சத்திய விரதம் மேற்கொண்டார். ஆகையால் ‘சத்ய சபா’ என்ற பெயரில் ஒரு சங்கம் ஆரம்பித்து வாரியார் சுவாமிகளைக் கொண்டு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ராமாயணம் சொல்ல ஏற்பாடு செய்யுங்ளேன்?” என்று ஒருநாள் பேச்சுவாக்கில் காமராஜிடம் கூறினேன்.

“அதை நீங்களே செய்யுங்களேன்” என்றார் காமராஜ்.

“தாங்கள் ஒப்புதல் அளித்தால் செய்கிறேன்” என்றேன்.

“நடத்துங்க. ஒரு கமிட்டி போட்டுக்குங்க. ஆனால் அந்தக் கமிட்டியில காங்கிரஸ் காரங்களைச் சேர்த்துடாதீங்க. அரசியல் கலந்துடும்” என்றார்.

எஸ். ஜி. ரத்னம் அய்யர், நல்லி ரங்கசாமி செட்டியார், லிஃப்கோ சர்மா, எஸ். வி. சகஸ்ரநாமம் போன்ற ஆத்திகம் பிரமுகர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம். அதற்கு வாரியார் சுவாமிகளும், திருமதி பட்டம்மாள் வாசனும் உபதலைவர்களாக இருக்க ஒப்புக் கொண்டார்கள். காமராஜ்தான் தலைவர். நான் செயலாளர்.

உடனேயே, வேகமாக வேலை தொடங்கி, காங்கிரஸ் மைதானத்தில் பெரிய மேடை அமைத்து, அலங்காரப் பந்தல் போட்டு, நாற்காலிகளைப் பரப்பியாயிற்று. ஏவி. மெய்யப்பன், ஆர்ட் டைரக்டர் சேகரை அனுப்பி வாயிலில் அமர்க்களமாக முகப்பு தயாரித்து விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/8&oldid=1145645" இலிருந்து மீள்விக்கப்பட்டது