பக்கம்:பழைய கணக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். நாராயணன் வத்து விஷயத்தைச் சொன்னதும் நான் உடனே கல்கியைப் பார்க்கப் போய்விட்டேன்.

“தந்தியில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார் கல்கி.

“ஐம்பது” என்றேன்.

“இங்கே உனக்கு 75 ரூபாய் தருகிறேன். இங்கேயே சேர்ந்துவிடு” என்றார், உடனே சரியென்று ஒப்புக்கொண்டு மறுநாளே கல்கியில் சேர்ந்து விட்டேன். அப்புறம் பல வருடங்கள் ஆதித்தனாரை நான் பார்க்கவேயில்லை. அந்தக் குற்ற உணர்வு என்னுள் வெகுநாள் வரை உறுத்திக் கொண்டே இருந்தது.

பின்னர், கல்கியிலிருந்து விலகிச் சொந்தமாக ‘வெள்ளி மணி’ ஆரம்பித்து அந்தப் பத்திரிகை பரபரப்பாக விற்பனையான போது ஆதித்தனார் ஒரு நாள் என்னையும் சின்ன அண்ணாமலையையும் பார்க்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினார். சொல்லாமல் கொள்ளாமல் அவரிடமிருந்து நின்று விட்ட குற்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டே இருந்த போதிலும் நான் நேரில் போனபோது அவர் அதைப் பற்றி எதுவுமே பேசாமல், “வெள்ளி மணி மிகப் பிரமாதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் திறமையை நான்தான் முதலில் புரிந்து கொண்டவன். கொஞ்ச நாள் பொறுத்திருந்தீர்களானால் நானே உங்களைத் தமிழனுக்கு ஆசிரியராக்கியிருப்பேன்” என்று கூறியபோது நான் வெட்கிப் போனேன். அதோடு நிற்காமல், “நான் வெள்ளி மணியைத் தமிழகம் முழுமைக்கும் விநியோகம் செய்ய விரும்புகிறேன். அந்த உரிமையை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.

ஆதித்தனாருக்குத்தான் எவ்வளவு பெரிய மனது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/86&oldid=1146030" இலிருந்து மீள்விக்கப்பட்டது