பக்கம்:பழைய கணக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

விடும் என்பதை உணர்ந்து கொண்டு மெல்ல மெல்ல அந்தப் பாதிப்பிலிருந்து என்னை நானே விடுவித்துக் கொண்டேன்.

1944-ல் கல்கியிடம் உதவி ஆசிரியராகச் சேர்ந்ததும் எல்லோரையும் போல நானும் ஒரு கதை எழுதிக் கொண்டு போய் அவர் மேஜை மீது வைத்தேன். அப்போது கல்கி சொன்னர் :

“முதலில் நீ இந்தக் கதை எழுதும் ஆசையை விட்டுவிடு. கதை எழுதுகிறவன்தான் உதவி ஆசிரியராக வர முடியும் என்கிற பிரமை விலக வேண்டும். வெளியிலே இருந்து ஆயிரம் பேர் கதை எழுதுகிறார்கள். அவற்றிலிருந்து வேண்டிய கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதானே?

உதவியாசிரியர் என்பவருக்கு முக்கியமாக ப்ரூஃப் திருத்தத் தெரிந்திருக்க வேண்டும். அரசியல், கலை விமரிசனம், பயணக் கட்டுரை, விகடத் துணுக்கு இதெல்லாம் எழுதத் தெரிய வேண்டும். சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதுவது ரொம்ப முக்கியம். இவை எல்லாவற்றையும் விடக் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்து அவற்றைக் குறைத்துக் கூட்டி ‘எடிட்’ செய்யும் திறமை ரொம்ப ரொம்ப முக்கியம்.”

அன்று முதல் கல்கியின் இந்த அறிவுரையை நான் ஒரு வேத வாக்காக மதித்துச் செயல்பட்டேன்.

சொல்வதைச் செயலிலும் காட்டியவர் கல்கி. கதையை அவர் ‘எடிட்’ செய்வதைப் பார்ப்பதே ஒரு பல்கலைக் கழகத்தில் படிப்பது மாதிரி. ஒரு கதையிலோ கட்டுரையிலோ அவர் தேவையில்லாத வரிகளை, அல்லது பாராக்களை வெட்டி விடுவார். அங்கே ஒரே ஒரு வரி எழுதிச் சேர்ப்பார். பிறகு படித்துப் பார்த்தால் அந்தக் கதைக்கே ஒரு புதிய ஜீவன் பிறந்திருக்கும். அவர் எடுத்து விட்ட அந்தச் சில வரிகள் பயனற்றதாகி அந்த ஒரு வரி அத்தனை சமாசாரத்தையும் சொல்லியிருக்கும். கயிற்றின் முனையில் லூஸாகப் பிரிந்து கிடக்கும் சில நூல்களைச் சேர்த்துத் திரித்து விட்டால் அந்தக் கயிறு முழுவதும் எப்படி முறுக்கேறி ‘சிக்’கென்று ஆகிவிடுகிறதோ, அத்தகைய பலத்தை அந்த ஒரு வரி உண்டாக்கி விடும். இந்தக் கலையில் கல்கி ஒரு மாமன்னன்.

ஒருமுறை அவர் சொன்னர்: “சினிமா விமரிசனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? நாம் எழுதும் விமரிசனத்தைப் படித்ததும் வாசகர்கள் படத்தைப் பற்றிப் பேசுவதை மறந்து நமது விமரிசனத்தைப் பற்றியே பேச வேண்டும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/88&oldid=1146032" இலிருந்து மீள்விக்கப்பட்டது