பக்கம்:பழைய கணக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

செய்து விட்டேன். ராஜினமாக் கடிதத்துடன் அவர் அறையில் போய் நின்றேன். என்னைக் கண்டதும், ஜாடையிலேயே என்னவென்று விசாரித்தார். கடிதத்தை நீட்டினேன். படித்துப் பார்த்துவிட்டு, “ம்...இது நான் எதிர்பார்த்ததுதான்” என்று கூறிவிட்டு “உன் முயற்சி கடவுள் அருளால் வெற்றி பெறுவதாக. என் வாழ்த்துக்கள்” என்று அந்தக் கடிதத்தின் கீழேயே நாலு வரிகள் எழுதி, அக்கெளண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு என் சம்பளக் கணக்கைத் தீர்த்துக் கொடுக்கும்படி தகவல் கொடுத்து விட்டார்.

அந்த ராஜினமாக் கடிதத்தில் அப்படி நான் என்ன எழுதியிருந்தேன்?

“சொந்தமாகப் புதிய பத்திரிகை ஒன்று தொடங்கப் போவதால் கல்கியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.” இவ்வளவு தான்.

விலகுவதற்கு உண்மையான காரணம் புதிய பத்திரிகை தொடங்க வேண்டுமென்ற ஆசை அல்ல. விலக வேண்டிய நிர்ப்பந்த முடிவுக்கு வந்து விட்டதாலேயே புதிய பத்திரிகை தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

கல்கியிடம் எனக்குக் கருத்து வேற்றுமை ஏற்பட்ட போதிலும், அவர் என்னுடன் பேசாமலிருந்த போதிலும் அவரிடம் எனக்கிருந்த பெரும் மதிப்பும் குருபக்தியும் எள்ளளவும் குறையவில்லை. அவரைப் பிரிகிறோமே என்று உள் மனம் ஓயாமல் விசும்பிக் கொண்டிருந்தது.

அன்றே அப்போதே கணக்கைத் தீர்த்துக் கொண்டு, திரு சதாசிவம் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு நேராக மாம்பலத்திலுள்ள சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணைக்குப் போய்ச் சேர்ந்தேன். கல்கியிடம் எனக்கேற்பட்டிருந்த உரசல் பற்றி சின்ன அண்ணாமலையிடம் முதல் நாள் மாலையே ஒரு மாதிரி சொல்லியிருந்ததால் நான் கல்கியிலிருந்து விலகி விட்டேன் என்ற செய்தி அவருக்கு அவ்வளவு ஆச்சரியம் தரவில்லை.

“அடுத்தாப்பல என்ன செய்யப்போறீக?” என்று கேட்டார்

“வெள்ளி மணி என்ற பெயரில் வாரப் பத்திரிகை ஒன்று தொடங்குவோம். நான் எடிட்டர். நீர் பப்ளிஷர். தமிழ்ப்பண்ணை வெளியீடாக இது வரட்டும்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/96&oldid=1146082" இலிருந்து மீள்விக்கப்பட்டது