பக்கம்:பழைய கணக்கு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

மனமாரப் பாராட்டியதுடன் மறுநாளே என்னையும் சின்ன அண்ணாமலையையும் அழைத்துத் தம் வீட்டில் ஒரு விருந்து அளித்தார்.

பாராட்டியதோடு, விருந்து அளித்ததோடு நிற்காமல் வெள்ளி மணியை மேலும் வெற்றிகரமாகக் கொண்டு வருவதற்கு என்ன வழி என்று கவலையோடு யோசிக்கலானர். “பத்திரிகை நடத்தப் பணம் வேண்டுமே. பணத்துக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? பத்திரிகை என்றால் எப்போதும் பணத்துக்கு ஒரு பகாசுரப் பசி இருந்து கொண்டே இருக்கும். யாராவது ஒரு பணக்காரரைப் பிடித்துப் போடுங்கள். அப்போதுதான் நீங்கள் பத்திரிகையின் மற்ற வேலைகளை முழு முயற்சியோடு கவனிக்க முடியும்” என்றார்.

“யாரைப் பிடிக்கலாம்?” என்று சின்ன அண்ணாமலை கேட்டார்.

நானும் சின்ன அண்ணாமலையும் சேர்ந்து பணக்காரர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று தயாரித்தோம். அதில் திரு ஏவி. மெய்யப்பன் பெயரும் ஒன்று. மெய்யப்பன் பெயருக்கு நேராகப் பேணாவால் டிக் செய்து, “இவர்தான் சரி. இவருடன் நான் இன்றைக்கே பேசி விடுகிறேன். பிறகு நீங்கள் இருவரும் இவரைச் சந்திப்பதற்கும் ஏற்பாடு செய்கிறேன்” என்றார். நானும் சின்ன அண்ணாமலையும் மிகுந்த உற்சாகத்துடன் வீட்டுக்குப் புறப்படுகிற நேரத்தில் கல்கி சி. அண்ணாமலையைத் தனியாக அழைத்து “இப்போதைக்கு ‘தீபம்’ பத்திரிகை வேண்டாம். வெள்ளி மணி மட்டும் நடத்தினால் போதும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.

வெள்ளி மணி பிறந்த கதை இதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/98&oldid=1146084" இலிருந்து மீள்விக்கப்பட்டது