பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


அந்த நாய்க்குட்டியை நான் அன்பாக வளர்த்து வந்தேன். அதற்குக் கண்ணன் என்று பெயரிட்டேன். 'கண்ணா கண்ணா' என்று அன்பாகக் கூப்பிடுவேன்.

முதன் முதலில் என் சிறுவயதில் நான் வளர்த்த அந்த நாய்க்குட்டி தெருநாய் இனத்தைச் சேர்ந்தது தான். ஆனாலும் எவ்வளவு அருமையான நாய்! அறிவுள்ள நாய்! நன்றியுள்ள நாய்! அதை இன்று நினைத்தாலும் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அது என் நண்பனைப் போல் பழகியது. என் குழந்தையைப் போல் வளர்ந்தது. காவல் வீரனைப் போல் கடமை ஆற்றியது. வீட்டுக்கு மிகப் பயன் உள்ள ஓர் உறுப்பாகி விட்டது.

வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் வாலை ஆட்டிக் கொண்டு அவர்களைச் சுற்றிச் சுற்றி வரும். குழந்தைகள் வந்தால் அவர்களோடு ஒடியாடி விளையாடும். வேற்று ஆட்கள் வந்தால் உறுமி உறுமிப் பாயும். பிச்சைக்காரர்கள், ஊர்க் காலிகள் யாரேனும் தெரு முனையில் வந்தால் கூட பெருங்குரல் கொடுத்துக் குரைக்கத் தொடங்கிவிடும்.