பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

இந்தப் புத்தகத்தில் எட்டுக் கதைகள் உள்ளன. எட்டும் சிட்டுச் சிட்டான கதைகள். சிறுவர் சிறுமியர் படித்து மகிழ அருமையான கதைகள்.

இந்த எட்டுக் கதைகளில், எழுதிய எனக்கு மிகப்பிடித்தமான கதை பாசமுள்ள நாய்க்குட்டிதான்.அதனால்தான் இந்தப் புத்தகத்துக்குப் ‘பாசமுள்ள நாய்க்குட்டி’ என்று பெயர் வைத்தேன்.

எல்லாருடைய மனமும் ஒன்றுபோல் இருக்குமா? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும். எனக்கு மஞ்சள் பிடித்திருந்தால் உனக்குச் சிவப்புப் பிடிக்கும், உன் தங்கைக்கு வெள்ளை பிடிக்கும், தம்பிக்குக் கருப்புப் பிடிக்கும். கதைகளிலும் அதுபோலத்தான்.

உங்களில் யாருக்கு எந்தக் கதை மிகப் பிடித்திருக்கிறது என்று எழுதுங்கள். அப்படி அந்தக் கதை பிடித்திருபதற்கு என்ன காரணம் என்று எழுதுங்கள். அதை வைத்துக் கொண்டு நீங்கள் எப்படிப்பட்டவர் என்று நான் கண்டு பிடித்து விடுவேன்.

பார்க்கலாமா?

புத்தகத்தை முழுவதும் படித்தபிறகு, பதினைந்து காசுக்கு ஓர் அஞ்சல் அட்டை வாங்கி, அதில் உங்கள் கருத்தை எழுதியனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி :

தமிழாலயம்,

137, ஜானிஜான்கான் தெரு, சென்னை-600 014

நாரா நாச்சியப்பன்