உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

புண்பட்டுப் போகாதோ வாழ்க்கைநலம்' என்றே
புலம்பினாள் மற்றொருத்தி; 'நாளாக வாகப்
பண்பட்டுப் போகுமடி ஒருபிள்ளை பெற்றால்
பாரேன்நீ!' எனச்சொன்னாள் பஞ்சாங்கப் பாட்டி!

'செருக்கான விரோதியுமே யானாலும் பெண்கள்
சிரிப்பொலியில் கைப்பாவை சிறைக்கிள்ளை ஆவார்;
தெருக்காணும் உண்மையிது; தலையணையின் உள்ளே
செய்துவைத்த மந்திரமாம்; அறியாதார் உண்டோ?
உருமாறிக் குணம்மாறித் தொடர்ந்துவரு நீழல்
ஒப்பாரே ஆணினங்கள், சித்திரைப்பெண் இந்தத்
திருவெல்லாம் வரப்பெற்றோள்' என்றொருத்தி சொன்னாள்;
சிரித்தார்கள் தெருத்திண்ணைப் பாட்டிமார்கள் எல்லாம்!

பதினோரு பெண்களுடன் பிறந்துவந்த செல்வி;
பதினோரு தங்கைகளும் தனைமணந்த ஆளன்
புதிதாக மணம்பேசித் திங்களொன்று போக்கிப்
பூரிப்பில் திளைத்திருக்கப் பொறுத்திருக்கும் செல்வி;
இது பெண்கள் ஏற்காத செயலென்று சொல்லி
இங்குள்ள தாய்மார்கள் எனையேச வேண்டாம்!
பொதுப்பெண்டிர் திருமனைக்கே கூடையினில் வைத்துப்
பொதிசுமந்து போனகதை நாம்மறக்கப் போமோ?

'பல்லிளித்துக் கண்சிமிட்டி அயலகத்துத் தோழி
பள்ளிக்குச் செல்கையிலே சித்திரையைப் பார்த்தே
எல்லோரும் உன்பேச்சே பேசுகின்றார் மாலை
இட்டேற்ற மணவாளன் பெயரென்ன?' என்றாள்;
'நல்லோர்கள் பகையென்றே நவில்கின்றார்' என்றே
நறுக்கென்றே சித்திரைப்பெண் பதில்சொல்லிப் போனாள்;
சொல்லுவரோ பெண்மக்கள் தம்கணவர் பேரைத்
தூயதமிழ்ப் பெண்டிரின் தொன்றுதொட்ட பண்பாம்!