48
கூனல் மரமேறிக் கொத்துக்கொத் தாய்மலரை
வானுக் களிக்க வளரும் மலர்க்கொடிகள்!
ஆட்டின் மணியோசை, ஆயன் குழலோசை
காட்டில் எதிரொலிக்கும்! காதுக்கோ பேரின்பம்!
கொல்லை வரகும், குளிர் தயிரும் எந்நாளும்
முல்லை நிலத்தின் முதல்.
மருதம்
பச்சைப் பசும்பாய் பரப்பியதைப் போல்நன்செய்
உச்சிக் கதிர்கள் ஓசிந்தாடும் காற்றினிலே!
வாழைக் குலையீன்று மாவின் மேல் சாய்ந்திருக்கும்!
கூழைப் பலாதென்னை குளத்தோரம் காட்டில்வாழ்
வேழச் செவிபோல் விரியும் மரையிலைகள்!
வாழ்வளிக்கும் இல்லத்து மாமணியாம் மங்கைபோல்
நீண்டிருக்கும் காம்பில் நிமிர்ந்திருக்கும் தாமரைப்பூ!
கூண்டுக் கருகில் குரல் கொடுக்கும் சிட்டினங்கள்!
கிள்ளை சிறகடிக்கும் கீழ்வானத் தோற்றம்போல்
பள்ளத்தே தேங்கும் நீர் பாட்டிசைக்கும் கால்க ளெலாம்
நாளும் உணவளிக்கும் நன்செய் மருத நிலம்
ஆளரசுக் கச்சாணி ஆம்!
நெய்தல்
பொன்னைப்போற் பூத்த புதர்த்தாழை புன்னையிலே
சின்னக் குருகிருக்கும் சீறும் கடலலைகள்!
நண்டோடிப் பாயும்! நடுக்கடலின் மீன்வளத்தைக்
கொண்டுவரும் கட்டுமரம்! கூழளிக்கும் செல்வமாம்!
நீலக் கடல்மேல் நெளிந்தாடும் பாய்மரங்கள்
காலைக் கதிரினிலே கண்ணைப் பறித்திருக்கும்!
பாயும் கடலலையின் பக்கத்து மேட்டினிலே
காயும் கருவாடு!, காக்கைகள் வட்டமிடும்!..
ஓயா அலைகளோ ஊரிரைச்சல் போலிருக்கும்!