உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இல்லம் புதுக்கி, எழில் புதுக்கி, நீராடி
அல்லொத்த கூந்தல் அழகைப் பெருக்க
நறுநெய் தடவுக! நன்றாக வாரிமுடி!
புத்தாடை பூண்நீ! மலர்சூடு! நம்வீட்டுச்
சொத்தாம் குழந்தைகளைத் தூய்மைப் படுத்துகவே!

நேற்றறுத்த நெல்லரிசி நீள்தாழை முள்ளாம்!
திருத்திக் களைந்து செழுங்கரும்பின் கட்டியிட்டுப்
பானை உலையேற்றிப் பால் சொரிந்து தீக்கொளுத்தப்
“பொங்கலோ பொங்கல் பெரும்பொங்கல் வாழியவே!
சிங்கத் தமிழர் திருநாளாம் வாழியவே!
‘இங்குள்ளோர்க் கொன்றுமினி இல்லை!’ எனுந்தீஞ்சொல்
தங்கா(து) ஒழிக! தமிழ்வாழ்க! வாழ்க” வெனச்
சூழ்ந்து குரலெழுப்பச், சோறு சமைந்துவரத்
தேனை, நறுநெய்யை, ஏலச் சிறுபொடியை
ஆனமட்டும் தூவி நீ ஆக்கிப் படைத்திடுவாய்!

கூப்பிடு வாழ்வோர் அனைவரையும்; கூப்பிட்டி!
காப்பெதற்குக் கார்தந்த செல்வம் விளைபொருள்கள்!
சாப்பாட்டைத் தேக்காதே! சண்டை அதன் விளைவாம்!
பங்காக்கி உண்போம்! பசியேது பின் நாட்டில்?

கொண்டுவா யாழைக் குழந்தைகளைப் பாடவிடு!
பண்டைத் தமிழ்வீரம் பாடட்டும்; கேட்போம்!
அரசர் மடிமேல், அரும்புலவர் செந்நாவில்
ஓங்கி வளர்ந்த உயர் தமிழைப் பாடட்டும்!
ஊனுயிரை, மக்கள் உணர்வை வளர்த்து வரும்
தேனாம் செழுந்தமிழைப் பாடட்டும்; கேட்போம்
உனது குரலினிமை உன்மக்கள் சொல்லில்
கனிந்துள(து); ஆதலினால், கண்மணிகள் பாடட்டும்!