உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

குணகடல் வேங்கடம் குமரி முதற்றேனும்
தென்னகம் உலகப் பன்மொழி நாட்டுப்
பொன்னகப் புகழைத் தன்னகங் கொண்ட
பல்காப் பியத்துத் தொல்காப் பியத்துள்
சொல்லிய கருத்தின் தொகையே அண்ணா!
அண்ணா, அண்ணா வழிவரு தம்பியர்
கண்ணாம் கலைஞர் கருத்தில் விளைந்த
பூம்புகார் கண்டோம்! பொலி தமிழ் கண்டோம்!
பூம்புகார் மன்றப் புலவர் தமிழ்த்தேன்
மாந்த வந்த மக்காள்! கவிதைத்
தீந்தமிழ்த் தேனில் திளைக்குஞ் செம்மல்காள்!
வாணி தாசன் வணங்கி
மாணுறு கவிஞரை வருகவென் றேனே!

(கலிவெண்பா)


முதலில் முளைத்தது யாதெனும் கேள்வி
முதல் இல் விடையாய் முளைத்தது முன்னாள்!
விரிவான் திரண்டு விளங்கிய தீயின்
எரிகதிர் மண்டிலம் எண்ணுக் கடங்கா
நெருப்புப் பெருங்கோள்கள் நீண்ட விசும்பில்
இருப்புக் கொளவும் இயங்கவும் வானிடை
ஈர்ப்பெனும் ஆற்றல் இடையில் புகுதரப்
பார்க்கும் ஒளிமீன் பலதோன் றினவே!
வளியும் மழையும் வழங்கிக் கதிரோன்
ஒளிசெய் உடுக்கள் உருவை உடலைப்
பலமுறை மாற்றிப் பலவுரு வாக்கி
அலைகடல் தேக்கி அடர்தீ அகற்றிச்
சுழலும் உருண்டையைத் தோன் றச்செய் தானே!
சுழலும் உருண்டையில் முன்னர்க் குளிர்ந்ததே