பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




3. சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என வழங்கும். பாட்டு என்பது பத்துப்பாட்டைக் குறிக்கும். பத்துப் பாட்டில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நான்கும் ஆற்றுப்படை நூற்களாகும். மலைபடுகடாம் கூத்தராற்றுப்படையென வழங்கும்.இவ்வாறுகொண்டால் பத்துப்பாட்டில் செம்பாகம் - அதாவது சரிபாதி ஆற்றுப்படை நூற்களாகும். கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் வறுமையுடன் வள்ளல் ஒருவனை நாடிச் செல்கையில் எதிரே ஏற்கெனவே வள்ளல் ஒருவனை நாடிச்சென்று பரிசில்பெற்ற கூத்தரோ, பாணரோ, பொருநரோ, விறலியோ வந்து இவர்கள் வறுமை தீர இந்த வள்ளலை நாடி இவ்வழியாகச் சென்றால் இன்னபொருள் கிடைக்கும் எனப் பயன்பெறுமாறு வழிகாட்டிச் செல்வது ஆற்றுப்படையின் பாற்படும்.

இவ் ஆற்றுப்படை ஒய்மாநாட்டு நல்லியக் கோடனை இடைக்கழிநாட்டு நல்லுர் நத்தத்தனார் பாடியதாகும். 260 அடிகள் ஆசிரியப்பாவில் அமைந்த இந்நூலிற் சீறியாழை வைத்திருக்கும் சிறுபாணர்கள் குறிக்கப்படுவதாலும், பேரியாழை வைத்திருக்கும் பெரும்பாணரைக் குறிக்கும் பெரும்பாணாற்றுப்படையினை நோக்க இஃது அளவாற் சிறிதாக இருப்பதனாலும் இந்நூலிற்குச் 'சிறுபாணாற்றுப்படை'யெனப் பெயர் வந்தது.