பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டுள் முலாவதாக அமைந்துள்ளது திருமுருகாற்றுப்படையாகும். பத்துப்பாட்டுள் ஐந்து ஆற்றுப்படை நூல்கள் அமைந்திருக்கின்றன. அத்தொகுப்பில் முதலாவதாக அமைவதும் திருமுருகாற்றுப்படையே யாகும். திருமுருகாற்றுப்படைக்கும் பிற ஆற்றுப்படை நூற்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. ஏனைய ஆற்றுப்படைகள் வறுமையில் வாடும் ஒருவன், தன் பசிப்பிணி தீரப் பொருள் வேண்டி வள்ளலை நாடித் தேடிச் செல்லும் வகையில் ஆற்றுப்படுத்தும் போக்கில் அமைந்திருப்பவை; இம்மைப் பயன் கருதியவை. ஆனால் திருமுருகாற்றுப்படை இம்மையின்பமும் மறுமைப் பயனும் கருதி அமைந்த நூலாகும். அருட்செல்வம் வேண்டுவான் ஒருவனை முருகனிடத்தே ஆற்றுப்படுத்தும் நூல் திருமுருகாற்றுப்படையாகும். நற்றினை, குறுந்தொகை முதலான எட்டுத்தொகை நூற்களுக்கு நூலின் முகப்பில் கடவுள் வாழ்த்துப்பா உண்டு. அம்முறையில் பத்துப்பாட்டிற்குத் தனியாகக் கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்று எழுதிச் சேர்க்காமல் முருகப் பெருமானின் அருளைப் பரவும் போக்கில் அமைந்துள்ள திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் முதலாவதாக இடம் பெற்றுள்ளது எனலாம்.

பத்துப்பாட்டில், ஏன் சங்க இலக்கியத்திலேயே திருமுருகாற்றுப்படைக்கு ஒரு தனி இடம் உண்டு. எட்டுத்-