பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை 85

எ ன்றும், எஞ்சிய இருபது செய்யுட்களுக்கு உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் உரையெழுதினார் என்றும் ஒரு பழைய செய்தி நிலவுகிறது. தமிழர் தவக் குறைவால் அவ்விரு உரைகளும் இன்று கிடைக்கவில்லை.

யாப்பருங்கலக்காரிகை குறுந்தொகையில் முருகன் பற்றிய பாசுரம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப்பாடலினை எல்லாக் குற்றமுந் தீர்ந்த செய்யுள் எனப் பாராட்டுகின்றது. அச் செய்யுள் வருமாறு :

தாமரை புரையும் காமர் சேவடி பவழத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின் கெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே.

இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளில் தாமரை என்பத னால் மருத நிலமும், பவழம்’ என்பதனால் நெய்தல் நிலமும், “குன்றி’ என்பதனால் முல்லை நிலமும், குன்று, என்பதனால் குறிஞ்சி நிலமும் என நானிலமும் சுட்டப் பெற்று ஊடலும் ஊடல் நிமித்தமுமான மருத நிலம் முதற் கண்ணும், கூடலும் கூடல் நிமித்தமுமான குறிஞ்சி நிலம் பாட்டின் இறுதிக் கண்ணும் கூறப்பெற்றிருப்பதால்

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்

-திருக்குறள் : 1330

என்ற திருக்குறளின் கருத்திற்கேற்ப ஊடலில் தொடங்கிக் கூடலில் முடிகிறதெனலாம். காதலின் பெற்றியும் இஃதே யன்றோ!

கு றுந்தொகையின் தனிச்சிறப்பு உவமை நயமாகும்.