பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

பாண்டிமாதேவி / முதல் பாகம்


முன்சிறைக்குத் திரும்பும்போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அவர்களெல்லோரும் சத்திரத்து வாசலை அடைந்தபோது அங்கே மடைப்பள்ளியில் வேலை செய்யும் பணிப் பெண்கள் கையைப் பிசைந்துகொண்டு நின்றார்கள். அவ்விருவர் முகத்திலும் கவலையும், பரபரப்பும் தோன்றின.

“பெண்களே! என்ன நடந்தது? ஏன் இப்படிக் கையைப் பிசைந்தது கொண்டு நிற்கிறீர்கள்? கோதை எங்கே? அதற்குள் தூங்கிவிட்டாளா? எனக்குத் தெரியுமே, அவள் சோம்பேறித் தனம்!” என்று தன் வழக்கப்படி வேடிக்கையாகப் பேச்சை ஆரம்பித்த அண்டராதித்த வைணவன் அந்தப் பெண்களின் முகம்போன போக்கைப் பார்த்துத் திடுக்கிட்டான். ஏதோ நடக்கத் தகாதது நடந்திருக்கிறதென்று அவன் மனதில் பட்டுவிட்டது.

“ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள் ? என்ன நடந்தது ? சொல்லுங்களேன். வாயில் கொழுக் கட்டையா அடைத்திருக்கிறது?” என்று இரைந்தான். அவனோடு நிற்கும் யாத்திரீகர்களின் கூட்டத்தைப் பார்த்து அந்தப் பணிப்பெண்கள் சிறிது தயக்கமடைந்தனர்.

அந்தக் குறிப்பைப் புரிந்துகொண்ட அண்டராதித்தன் வாயிற் கதவு முழுவதையும் நன்றாகத் திறந்துவிட்டு, “நீங்கள் உள்ளே செல்லுங்கள். நான் இதோ, இவர்களிடம் என்னவென்று விபரம் கேட்டுக் கொண்டு வருகிறேன். அருகில் இருந்தவர்களிடம் கூறி அவர்களை உள்ளே அனுப்பினான்.

அந்தப் பணிப் பெண்கள் அவன் பக்கத்தில் வந்து நெருங்கி நின்றுகொண்டு பயத்தால் ஒடுங்கிப் போன குரலில், “ஐயா! திடீரென்று அம்மாவைக் காணவில்லை. இருட்டி இரண்டு நாழிகை இருக்கும். தீபங்களை ஏற்றிவிட்டு இங்கே சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து கொண்டு ஒலையில் படித்தரக் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள். சிறிதுநேரம் கழித்து நாங்கள் வந்து பார்த்தபோது அம்மாவைக் காணவில்லை. இங்கிருந்த ஒலை எழுத்தாணி ஆகியவற்றையும் காணோம். தீபம் அணைக்கப்பட்டு இருளடைந்திருந்தது. மறுபடியும் தீபத்தை ஏற்றிக்கொண்டு வந்து இங்கே பார்த்தபோது இந்த உடைந்த