பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

149


“எப்படியானால் என்ன? எப்படியோ என்னைக் கண்டு பிடித்துவிட்டீர்கள். உங்கள் தம்பியின் ஆலோசனையும், உதவியும் இல்லாமலே நீங்கள் பெற்ற முதல் வெற்றியாகட்டும் இது. வாருங்கள், சத்திரத்துக்குப் போகலாம்! இந்த இரவில் இப்படி நடுக்காட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பானேன்?” என்று அவனையும் கூப்பிட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் கோதை.

மறுநாள் கள்லை புறத்தாய நாட்டுக் கோட்டையில் நாஞ்சில் நாட்டின் கூற்றத் தலைவர்கள் வந்து கூடிவிட்டனர். தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர், பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால மாறனார், அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள் முதலிய நாஞ்சில் நாட்டுப் பெருமக்களின் முதன்மையாளர்களெல்லாம் மகாராணி வானவன் மாதேவியாரின் அவசரக் கட்டளையை மதித்து ஒடோடியும் வந்து கூடியிருந்தனர்.

அவ்வளவு அவசரமாக மகாசபையைக் கூட்டுவதின் நோக்கம் என்னவாக இருக்குமென்று புரிந்துகொள்ளும் ஆவல் நிரம்பிய மனத்தோடு காத்திருந்தனர் அவர்கள்.

ஆனால் மகாசபைக் கூட்டம் எந்த இருவர் இல்லாவிடில் நிச்சயமாக நடக்க முடியாமல் போய்விடுமோ, அந்த இருவரும் அதுவரையில் வந்து சேரவே இல்லை. முடிந்தால் முதல் நாள் இரவே வந்துவிடுவதாகச் சொல்லி விட்டுப் போயிருந்த தளபதி வல்லாளதேவன், மறுநாள் காலை விடிந்து பத்து நாழிகைக்கு மேலாகியும் இடையாற்று மங்கலத்திலிருந்து திரும்பி வரவில்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பியும் வரவில்லை. கூற்றத் தலைவர்களும், மகாராணியும், பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர் முதலியோரும் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.