பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அனுப்பியிருக்கலாமென்று தளபதி வல்லாளதேவனின் மனத்தில் ஒரு சந்தேக எண்ணம் உறைக்க ஆரம்பித்தது.

துறவிக்கு மகாமண்டலேசுவரர் தம்முடைய மாளிகையிலேயே எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார் போலிருக்கிறது? இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது; கிளியைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைத்து வைத்துத் தம் சொந்த இன்பத்துக்காக அதற்குப் பாலும் பழமும் கொடுக்கின்ற மனிதர்களைப் போல, ஏதோ ஒரு பெரிய சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் துறவியை இடையாற்று மங்கலம் தீவுக்குள் உலகத்துக்குத் தெரியாமல் இவர் ஒளித்து வைத்திருக்கிறார்.

‘மகா மேதையாகவும் குலதெய்வமாகவும் இவரை எண்ணிக் கொண்டிருக்கும் மகாராணியிடம் இந்த இரகசியங்களை நான் அறிவித்தால் நம்பக்கூடத் தோன்றாது, காலம் வரும். அப்போது ஆதார பூர்வமான சான்றுகளோடு எல்லா உண்மைகளையும் விவரமாக வெளிப்படுத்துகிறேன்.’

நாராயணன் சேந்தனின் குறட்டை ஒலியால் தூக்கத்தை இழந்த வல்லாளதேவன் மேற்கண்டவாறு பலவகைச் சிந்தனைகளில் மூழ்கியிருந்தான்.

“அட என்னதான் ஆசை இருக்கட்டுமே! மனிதருக்கு மானம், வெட்கம் ஆகிய பண்புகள் கூடவா ஆசை வந்தால் இல்லாமல் போய்விடும்? யாரோ ஒரு சாமியாரை மயக்குவதற்கும் சொந்த மகளை அவனோடு சிரித்துப் பேசுமாறு செய்கிறார். பிறரை மயக்கிக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் மகளின் சிரிப்பும், பேச்சும்தான் இவருக்குச் சரியான சாதனம் போலும்! இவ்வளவு படித்தவருக்குப் பெண்களுக்கென்று இந்த நாட்டில் பரம்பரைப் பரம்பரையாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடு, பண்பு, ஒழுக்கம் எல்லாம் மறந்தா போய்விட்டன? ஐயோ! இந்த மனிதருடைய அந்தரங்க வாழ்க்கையை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது. இன்னொருபுறம் பரிதாபமாகவும் இருக்கிறது. இவ்வளவும் ஆசை படுத்துகிற பாடு அல்லவா?”