பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

பாண்டிமாதேவி / முதல் பாகம்


யாரிடம் போய்ச் சொல்வேன்? நேற்றிரவு துறையில் இழுத்துக் கட்டிவிட்டு வந்த தோணியைக் காலையில் எழுந்திருந்து போய்ப் பார்த்தால் காணவில்லை” என்று பதற்றமும் நடுக்கமும் செறிந்த குரலில் சொன்னான் அம்பலவன் வேளான். வேளான் கூறியதைக் கேட்டுச் சேந்தன் மேலும் வியப்பில் மூழ்கினான்.

“ஐயா! நீங்கள்தான் ஏதாவது ஒருவழி சொல்ல வேண்டும். இன்றைக்கு மகாமண்டலேசுவரரும் தளபதியும் காலையில் அக்கரைக்குப் போய்க் கோட்டைக்குச் செல்ல வேண்டுமென்று கூறியிருந்தார்கள். கோட்டையில் இன்று காலை மகாசபைக் கூட்டமாமே? இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் துறைக்கு வந்து படகு எங்கே?’ என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? ஐயோ! இன்றைக்கென்றா இப்படி நடக்கவேண்டும்? எல்லாம் என் தலையெழுத்து” என்று அலுத்துக் கவலைப்பட்டுக் கொண்டான் படகோட்டி அம்பலவன் வேளான்.

“இன்று காலையில் எப்போது போய்ப் பார்த்தாய்?” என்று நாராயணன் சேந்தன் கேட்டான்.

“இப்போதுதான் சிறிது நேரத்துக்கு முன்பு போய்ப் பார்த்தேன். தோணியைக் காணவில்லை என்று தெரிந்தும் பதறிப்போய் உடனே உங்களைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டேன். நீங்களே எதிரில் வந்து விட்டீர்கள்.”

“அதுசரி! நேற்றிரவு துறையில் தோணியைக் கட்டிவிட்டு வரும்போது துடுப்புகளையும் அதற்குள்ளேயே போட்டு விட்டு வந்திருந்தாயோ?”

“ஆமாம், ஐயா! துடுப்புக்களை எப்போதும் தோணிக்குள்ளே போட்டு வைத்துவிட்டு வருவதுதான் வழக்கம் அதுபோலவே நேற்றும் செய்தேன்.”

“ஆகா! நான் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது” என்றான் சேந்தன்.

“என்ன நினைத்தீர்கள் ஐயா! படகை யார் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்களென்று உங்களுக்குத் தெரியுமா?” என்ற ஆவல் துடிக்கும் தொனியில் நம்பிக்கையின் சாயை மலர