பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

159


போனபடி தறிகெட்டுப் பாய்ந்து வெறி கொண்டு ஓடினால் என்ன வேகம் இருக்குமோ, அந்தப் பயங்கர வேகத்தைத் தான் அப்போதைய பறளியாற்று வெள்ளத்துக்கு உவமை கூற வேண்டும்.

புறப்பட்ட இடத்திலிருந்து நேரே அம்பு பாய்வதுபோல் அக்கரைக்குப் போக முடியவில்லை. வெள்ளத்தின் போக்கில் இழுபட்டு ஒருபுறமாகச் சாய்ந்து மெதுவாகவே சென்றது படகு. அவர்கள் வரும்போது இருந்ததை விட வெள்ளத்தின் வேகம் இப்போது அதிகரித்திருந்தது. தளபதி வல்லாளதேவன் அக்கரையை அடைந்த போது வெகு நேரமாகிவிட்டது. பொழுது விடிவதற்கு இன்னும் நான்கைந்து நாழிகைகளே இருந்தன. நிலா ஒளி சற்று மங்கியிருந்தது.

அங்கிருந்த மரமொன்றில் படகை இழுத்துக் கட்டிவிட்டுக் கரையோரமாக நடந்து முன்னிரவில் தான் குதிரையை விட்டிருந்த மரத்தடியை அடைந்தான். பின் இரவு நேரத்தின் குளிர்ந்த காற்றும் கரையோரத்துத் தாழம் புதர்களில் இருக்குமி டம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும் சோர்ந்திருந்த தளபதி வல்லாளதேவனின் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டின.

மரத்தடியில் அவன் குதிரை துவண்டு போய்ப் படுத்திருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மரத்தடியில் ஆளரவம் கேட்டுக் கிளைகளைச் சரணடைந்திருந்த பறவைகள் சிறகுகளை அடித்தும், ஒலிகளைக் கிளப்பியும், தங்கள் இருப்பைப் புலப்படுத்தின. தளபதி குதிரையைத் தட்டி எழுப்பினான். குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்று உடலைச் சிலிரித்தது. ஒசை ஒலியடங்கிய பேரமைதி செறிந்த அந்தப் போதில் பயங்கரமாகப் பறளியாற்றங்கரை எங்கனும் எதிரொலித்தது அந்தக் கனைப்பொலி.

சூழ்நிலை இருக்கிற விதத்தைப் பார்த்தால் இன்றும் இனி வரும் சில நாட்களிலும், புறத்தாய நாட்டுக் கோட்டையைச் சுற்றி மகாராணியாருக்கு என்னென்ன ஆபத்துக்கள் காத்திருக்குமோ? என்னைக் காட்டிலும் பொறுப்புள்ள பதவியும், அதிகாரங்களும் மகாமண்டலேசுவரருக்கு இருக்கலாம். ஆனால்