பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

பாண்டிமாதேவி / முதல் பாகம்


காவல் இருந்து கொண்டிருக்கும். ஆட்சியில் குழப்பம், சூழ்ச்சி, சதி இவற்றில் ஏதாவது ஏற்பட்டாலோ, ஏற்படுவதாகத் தெரிந்தாலோ தளபதி ஆபத்துதவிகளைப் பயன்படுத்தலாம்.

ஆபத்துதவிகளைப் பயன்படுத்தவேண்டிய அத்தகைய நெருக்கடி இப்போது தளபதி வல்லாளதேவனுக்கு ஏற்பட்டிருந்தது. யாரால் எப்போது என்ன ஏற்பட முடியுமென்று அவனால் சிந்திக்கவோ, சொல்லவோ முடியவில்லை. இரவு நடந்தவற்றை நினைத்தால் இடையாற்று மங்கலம் நம்பியின் மேலேயே அவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு ஆறுகளுக்கு நடுவேயுள்ள அந்தச் சின்னஞ்சிறு தீவில் மகாமண்டலேசுவரரின் உள்ளத்திலும், மாளிகையிலும் நிறைந்து கிடந்த சூழ்ச்சிகளை எண்ணியபோது அவன் திகைத்தான். ‘ஒரு பெரிய இரவின் சிறிய சில நாழிகைகளுக்குள் இடையாற்று மங்கலத்தில் இவ்வளவு மர்மங்களைப் புரிந்துகொள்ள முடியுமானால் சில நாட்கள் இரவும் பகலும் எந்நேரமும் அங்கேயே முழுமையாகத் தங்கியிருந்தால் இன்னும் எவ்வளவு தெரிந்துகொள்ள முடியும்?’ என்று எண்ணினான் அவன்.

தளபதியின் முகத்தில் தோன்றி மறையும் ஆழ்ந்த சிந்தனைகளின் சாயையைப் பார்த்துக்கொண்டே பயபக்தியோடு எதிரில் நின்று கொண்டிருந்தான் மகர நெடுங்குழைக்காதன்.

“ஓ! உங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு நான் ஏதோ சிந்தனையில் மூழ்கிவிட்டேன்?”

“பரவாயில்லை! நான் காத்திருப்பேன்” என்று அடக்கமாகக் கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.

“குழைக்காதரே! நேற்று மாலை குமரித் துறையில் மகாராணியார் வழிபாட்டுக்கு வந்திருந்தபோது நடந்த நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தென்பாண்டி நாட்டுக்கு இது ஒரு சோதனைக்காலம். நமக்குத் தெரியாமலே நம்மைச் சுற்றிச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறிது காலத்துக்கு நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். அறிவின் பலத்தையோ, சிந்தனையின் வன்மையையோ கொண்டுமட்டும் இவற்றைச் சமாளித்துவிட முடியாது. இப்போது நான் சொல்வதை நீங்கள் நன்றாகக் கவனித்துக் கேட்கவேண்டும். ஆபத்துதவிப் படைகள்