பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பாண்டிமாதேவி / முதல் பாகம்


மணியக்காரன் பிரதான வாசலை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக்கொண்டுத் தன் வீட்டுக்குப் போய்விடுவான். அவனுடைய குடியிருப்பு வீடும் உட்புறமே கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.

முன்சிறை அறக்கோட்டத்தின் அமைப்பை மானnகக் கண்ணால் நோக்கிப் பார்த்தால்தான் நேயர்களால் இவற்றையெல்லாம் நன்றாக விளங்கிக் கொள்ளமுடியும், வாருங்கள் இரவு நேரமே என்று தயங்காமல் முன்சிறைக்குப் போவோம். இப்போது நாழிகை என்ன? நாழிகையைப் பற்றி நமக்கு என்ன பயம்? இன்னும் முதல் யாமம் முடிய வில்லையாதலால் அறக்கோட்டத்தின் கதவை இதற்குள் அடைத்திருக்கமாட்டார்கள்.

ஆ! இதோ வந்துவிட்டோம். எதிரே தெரிகிறது பாருங்கள், உயரமான மருதமரக் கூட்டத்துக்கு நடுவே காவி நிறக் கட்டிடங்கள். கோட்டை வாசல் கதவுகளைப் போன்ற அந்த முன்வாசல் கதவருகே யாரோ தீவட்டியும் கையுமாக நின்று கொண்டிருப்பது தெரிகிறதே! நிற்பது யார்? சற்று அருகில் நெருங்கிப்போய் அவர்களைப் பார்ப்போம்.

அடாடா! முதல் யாமம் முடிகிற நேரம், நெருங்கிவிட்டது போலிருக்கிறது. தீவட்டியோடு நிற்பவன் வேறு யாருமில்லை, மணியக்காரனான அண்டராதித்த வைணவன்தான். கதவுகளை அடைப்பதற்காக வந்து நின்றுகொண்டிருக்கிறான். ஆகா! இந்த மாதிரிக் கட்டை குட்டையான தோற்றத்தையுடைய ஆளை இதற்கு முன்பே பல தடவைகள் பார்த்திருப்பதைப்போல் ஒரு பிரமை உண்டாகிறதே!

ஆமாம்! இப்போது நினைவு வருகிறது. கையில் தீப்பந்தத்தோடு கதவைச் சாத்துவதற்காக நிற்கும் இந்த மனிதன் அசைப்பில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமான நாராயணன் சேந்தனைப்போல் அல்லவா இருக்கிறான்? அதேபோலக் குடுமி! அதேபோல நெற்றியில் கீற்றுத் திலகம்! அகத்திய வடிவம்!