பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“அப்படிக் கேள், சொல்கிறேன்! இந்த மாதிரி முரடர்களுக்காகவா சத்திரத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள்?” என்று அவளோடு ஒத்துப்பாடினான்.

“அம்மணி! இதுவரை இந்த அசட்டு மனிதரிடம் சண்டை பிடித்ததுதான் பலன். நீங்கள் மிகவும் நல்லவர்போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் வெளிதேசத்திலிருந்து வந்தவர்கள். விழிஞத்தில் வந்து இறங்கினோம். முன்சிறைச் சத்திரத்துக்குப் போனால் தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்று கூறினார்கள். அதனால்தான் இங்கு வந்து சேர்ந்தோம்” என்று குழைந்து கொண்டு பேசினான் ஒருவன்.

“அது சரி! நீங்கள் மூவரும் யாரென்று முதலில் சொல்லுங்கள். வருகிறவர்களை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் இங்கு யாருக்கும் இடம் கொடுப்பது வழக்க மில்லை” என்றாள் கோதை நாச்சியார்.

வாசற்படியில் நின்ற அந்த மூவரும் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆந்தையைப்போல் பேந்தப்பேந்த விழித்தனர்.

“ஒரு வேளை நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாதோ” - மனைவி பக்கத்தில் நிற்கிற தெம்பில் குத்தலாக இப்படி ஒரு போடு போட்டான் அண்டராதித்த வைணவன்.

“ஏய்! குடுமிக்காரச் சோழியா! இனிமேல் நீ குறுக்கே பேசினால் மண்டையைப் பிளந்துவிடுவோம்” என்று சினம் அடைந்து கத்தினான் ஒருவன்.

“யாராயிருந்தால் உங்களுக்கு என்ன? சத்திரத்தில் தங்க இடம் கேட்டால் பூர்வோத்ரமெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டுமா?” என்றான் இன்னொருவன்.

கோதை நாச்சியார் அவர்களை ஒருமுறை நன்றாகப் - பார்த்தாள். அவர்கள் விவாதமும் குயுக்தியும் அவளுடைய மனத்தில் பல மாதிரியான சந்தேகங்களைக் கிளப்பின.