பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

பாண்டிமாதேவி / முதல் பாகம்


சாமர்த்தியம், சாதுரியம் இவைகளால் மாத்திரமே சாதிக்க முடிந்த காரியங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன. மாக மண்டலேசுவரரின் செயல்களெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை. - ஏனோ தெரியவில்லை. இடையாற்றுமங்கலம் நம்பியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவனுடைய மனக்கண்ணுக்குமுன் உருவெளியில் உயரமும், அகலமும், பருமனும் அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் மாபெரும் மலைச்சிகரமொன் தோன்றியது.

லதா மண்டபத்துக்குள் நுழைந்த நாராயணன் சேந்தன் வெகு நேரமாகியும் வெளியே திரும்பிவரவில்லை. அங்கே அவன் என்னதான் செய்துகொண்டிருக்கிறான்? போய்ப் பார்ப்போமே என்று வல்லாளதேவன் விருந்தினர் மாளிகை வாசலிலிருந்து பதுங்கிப் பதுங்கி நடந்து லதா மண்டபத்துக்குள் புகுந்தான். அவனுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. லதா மண்டபத்தில் நாராயணன் சேந்தன் இல்லை. வந்த வழியே திரும்பாமல் இந்தக் கொடிமண்டபத்திலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழி ஏதேனும் இருக்குமோ? அப்படி இருக்குமானால் இந்த வழியாகச் சேந்தன் வெளியேறியிருப்பானோ? எதற்கும் சந்தேகமறச் சுற்றிப் பார்த்துவிடலாம் என்று எண்ணியவனாய் வட்ட வடிவமாய் அமைக்கப் பட்டிருந்த ஒரு மேடையை நெருங்கினான்.

பளிங்கு மேடையில் ஓரிடத்தில் தீபத்தைக் கீழேவைத்து எடுத்ததற்கு அடையாளமாகிய எண்ணெய்க் கரை படிந்திருப்பது இலேசாகத் தெரிந்தது.

பளிங்கு மேடையின் நட்ட நடுவில் உட்கார்ந்த கோலத்தில் திருமகள் சிலை ஒன்று செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சிலையின் கையிலிருந்த தாமரை மொட்டின் மேலும் கீழே படிந்திருந்ததுபோல் எண்ணெய்க் கறையின் தழும்பு தெரிந்தது. யாரோ எண்ணெய்ப்பட்ட விரல்களால் தொட்டிருக்க வேண்டுமென்று சிரமம் இல்லாமல் ஊகித்க முடிந்தது.