பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

113


நாராயணன் சேந்தன் தன் கையில் கொண்டு வந்த எண்ணெய்த் தீபத்தைப் பளிங்குத் தரையில் வைத்துவிட்டு அந்தக் கைவிரல்களால் திருமகள் சிலையின் கையிலுள்ள தாமரை மொட்டையும் தொட்டிருக்கிறான்.

தளபதி வல்லாளதேவனுக்கு மின்வெட்டும் நேரத்தில் ஒரு யோசனை உண்டாயிற்று. நடுங்கும் கையால் திருமகள் சிலையின் வலதுபுறத்துத் தாமரை அரும்பைத் தொட்டான். தொட்ட வேகத்தில் அது நன்றாகத் திருகுவதற்கு வந்தது. அது தானாகத் திருகமுடியாமல் இறுகி நிற்கிறவரையில் அதைத் திருகினான் தளபதி.

பன்னிரண்டாவது முறையாக அவன் கைவிரல்கள் அந்த மலர் அரும்பைத் திருகுவதற்கு நெருடியபோது அவனுடைய உடலைச் சுமந்து கொண்டிருந்த பளிங்கு மேடை பூகம்பமடைந்தது போலக் கிடுகிடுவென்று ஆடியது. அடுத்த கணம் அந்தக் கருங்கல்லாலான திருமகள் சிலை யாரோ பிடித்து இழுத்துக்கொண்டு போவதைப்போலக் கிறுகிறுவென்று பின்னால் நகர்ந்தது. அது இருந்த இடத்தில் நாலுகோல் நீளமும் நாலுகோல் அகலமுமுள்ள சதுரமான இடைவெளி ஒன்று ஏற்பட்டது. மிரளும் கண்களால் குனிந்து பார்த்தான் அவன். வரிசையாகப் படிகள் தெரிந்தன. அதற்கப்பால் ‘கருங்கும் என்று ஓர் இருட்டுக் குகையாக இருந்தது. தன்னைச் சுற்றிலும் நாலுபுறமும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்தச் சுரங்கத்துக்குள் துணிந்து இறங்கினான் அவன்.

பத்துப் பதினைந்து படிகள் இறங்கி உள்ளே சென்றதும் மேலே பார்த்தது போலவே ஒரு திருமகள் சிலை. சிலையின் இடது கைத் தாமரை அரும்பைத் திருகினான் அவன். தளபதியின் எண்ணம் சரியாக இருந்தது. அவன் அதைத் திருகி முடிந்ததும் மேலே சுரங்க வாயில் நகர்ந்து மூடிக் கொண்டுவிட்டது. வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த சிறிதளவு நிலா ஒளியும் அடைப்பட்டுப் போகவே, மைக்குழம்பை வழித்து அப்பினாற்போல் இருட்டு கோரமாயிருந்தது.