பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

117


பாக்கியம் ! தாங்கள் சாதாரணக் குடும்பத்துத் தாயாகப் பிறந்திருந்தால் நாங்களெல்லாம் அஞ்சலி செய்யும் மதிப்புக்குரிய பாண்டிமாதேவியாகத் தங்களை அடைந்திருக்க முடியுமா !” என்று உபசாரமாக மறுமொழி கூறினாள் விலாசினி.

“எங்களுடைய ஆடலும், பாடலும் எங்கே ஒடிப்போய் விடப்போகின்றன? மகாராணியாருடைய அன்புக் கட்டளை எந்த விநாடியில் கிடைத்தாலும் ஓடிவந்து ஆடவும், பாடவும் காத்திருக்கிறோம். கலைகளை அர்ப்பணம் செய்ய வேண்டிய இடமே இதுதானே?” என்று விநயமாகக் கூறினாள் பகவதி.

அவர்கள் இருவரும் கூறியவற்றைக் கேட்ட வானவன் மாதேவியின் வதனத்தில் எத்தனையோ அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற அற்புதமான புன்னகை ஒன்று மலர்ந்தது. உலக அநுபவங்களின் வாசனையை அதிகம் நுகர்ந்தறியாத அந்த இளம் பெண்களுக்கு மகாராணியின் சிரிப்புப் புரியவா போகிறது?

“குழந்தைகளே ! இந்த வயதில் உங்களைப் போன்றவர்களுக்கு இப்படித்தான் தோன்றும். பதவி, படாடோபம், இராஜபோகம் எல்லாவற்றாலும் கிடைக்கக்கூடிய ஆடம்பரம் இணையற்ற பெரும் பேறு என்று நினைப்பீர்கள். ஆனால் அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கக்கூடிய துன்பங்கள், ஆசாபாசங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியாதவை. விலாசினி! உன் தகப்பனார். உனக்குச் சிலப் பதிகாரம் கற்பித்திருப்பாரே? தொல்காப்பியத்தை அரங்கேற்றிய மாபெரும் அதங்கோட்டாசிரியரின் வழியில் வந்து இன்று தாமும் அதே பேர் பூண்டு விளங்கும் உன் தந்தை தமிழ் இலக்கியக் கடல். அவரிடம் அநேகமாக நீ எல்லா நூல்களையும் கற்றுக்கொண்டிருப்பாய். என்ன, நான் நினைப்பது சரிதானா?”

“ஆமாம். தேவி! என் தந்தை குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வற்புறுத்தி ஆவலோடு அவற்றையெல்லாம் எனக்குக் கற்பித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தைப் பலமுறை அவரிடம்