பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அரசுரிமையும், அமைதியும் குழப்பமான சூழ்நிலைகளால் அவதியுற்றுக் கொண்டிருந்தபோது அதற்கான நல்ல, அல்லது தீய முடிவை உருவாக்க வேண்டிய பொறுப்பு அந்த அழகிய மாலை நேரத்துக்கு ஏற்பட்டிருந்தது. தென் தமிழ்நாட்டின் காவற் பொறுப்பை ஏற்க வேண்டிய பொறுப்பு தம் வாழ் நாளில் அந்தப்புரத்தினின்றும் வெளியேறி யறியாத ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்பட வேண்டிய நிலை.

அண்டை நாட்டில், சோழ அரசன் ஆதரவற்ற தென் பாண்டி நாட்டை எப்போது கைப்பற்றலாமென்று படை வசதிகளோடு துடித்துக் கொண்டிருக்கிறான். மகா மன்னரும், திரிபுவனச் சக்கரவர்த்தியும், சென்ற போரெல்லாம் வெற்றியே அடைந்தவருமான சடையவர்ம பராந்தக பாண்டியர் பள்ளிப்படை எய்தி இறைவனடி சேர்ந்துவிட்டார். பாண்டிய நாடு துயரத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம் பராந்தக பாண்டியரின் புதல்வராகிய இராசசிம்ம பாண்டியன் இளைஞன். காலஞ்சென்ற மகா மன்னரின் கோப் பெருந்தேவியான வானவன்மாதேவியார் கணவனை இழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. யாராவது படை யெடுத்து வந்தாலும் எதிர்த்துப் போர் செய்ய இயலாத இந்த நிலையில் சோழ அரசனும் கொடும்பாளுர்க் குறுநில மன்னனும் படையெடுத்து வடபாண்டி நாட்டைக் கைப்பற்றி விட்டனர். இளைஞனான இராசசிம்ம பாண்டியன் சோழனாலும், கொடும்பாளுர்க் குறுநில மன்னனாலும் துரத்தப்பட்டு அவர்களுக்கு அஞ்சி இலங்கைத் தீவுக்கு ஓடி விட்டான்.

கோப்பெருந்தேவியாகிய வானவன்மாதேவி தென் பாண்டி நாட்டில் பறளியாற்றின் கரையிலிருந்த புறத்தாய நாட்டுக் கோட்டையில் போய்த் தங்கியிருந்தார். கணவனை இழந்த கவலை, போரில் தோற்று இலங்கைத் தீவுக்கு ஓடிய மகனைப் பற்றிய வருத்தம், வடபாண்டி நாட்டை அபகரித்துக் கொண்ட எதிரிகள் தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டுக்கும் படையெடுத்து வந்து விடுவார்களோ என்ற பயம்