பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பாண்டிமாதேவி / முதல் பாகம்


நோக்கத்தோடு புகுந்தார்கள், என்ன செய்தார்கள், அல்லது என்ன செய்வதற்காக வந்திருந்தார்கள் என்பனவெல்லாம் தெரியவில்லை. நிலா முற்றத்துச் சுவரை ஒட்டினாற்போல இருக்கும் மகிழ மரக்கிளையில் வந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்தை உத்தேசித்து ஏறியிருக்க வேண்டும். அதனால்தான் சுமை தாங்காமல் அந்தக் கிளை முறிந்திருக்கிறது.”

“இதென்ன? எல்லாம் அதுமானம்தானா? நேரடியாக ஒன்றும் பார்த்துத் தெரிந்து கொண்டு வரவில்லையா, நீங்கள்?’ என்று வானவன்மாதேவி குறுக்கிட்டுக் கேட்டார்.

“தேவி! நாங்கள் என்ன செய்ய முடியும்? வந்தவர்களில் எவரும் பிடிபடவில்லை. வீரர்கள் அரண்மனை நந்தவனத்தில் சல்லடைக் கண் இடமும் விடாமல் தேடிப் பார்த்து விட்டார்கள். நந்தவனத்து ஈர மண்ணிலும், கால்வாய்க் கரையில் தரையில் பதிந்திருக்கும் அடிச்சுவடுகளிலிருந்தும் ஒருவன் தனியாக வரவில்லை என்று தெரிகிறது. அதைத் தவிர மகிழ மரத்தடியில் ஒரு குத்துவாளும், கால்வாய்க் கரைப்படியில் ஒரு தலைப்பாகையும் விழுந்து கிடந்தன. கோட்டை மெய்க்காப்பாளர்கள் அவற்றை எடுத்துக் கொண்டுபோய்ப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒருவேளை இந்த இரண்டு பொருள்களையும் கொண்டு, வந்தவர்களைக் கண்டுபிடிக்க முயன்றால் வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும்” என்று பவழக்கனிவாயர் கூறி முடித்தபோது கேட்டுக்கொண்டிருந்த வானவன்மாதேவியின் முகத்தில் சிரிப்பின் மலர்ச்சி ஒளிர்ந்தது.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“சிரிக்கவேண்டிய காரணம் இருந்தது, சிரித்தேன், பவழக்கனிவாயரே! உலகியல் அறிவையும், ஞானச் செல்வத்தின் விளைவையும் வளர்க்கக்கூடிய காந்தளூர் மணியம்பலத்தின் தலைவராகிய உமக்குக் கூடவா இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது?”

“இதில் எல்லாம் என்றால்...?"