பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

123

நாங்கள் இவ்வளவு நாழிகைக்கு மேலும் இங்கே அந்தப்புரப் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருப்பது முறையல்ல. கீழே மாளிகையில் போய்ப் படுத்துக் கொள்கிறோம். நீங்கள் இருவரும் மகாராணியைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறி எச்சரித்து விட்டுச் சென்றனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. அந்தப்புரத்துப் பணிப்பெண்கள் தீபங்களை அணைத்துக் கதவுகளை ஒவ்வொன்றாக அடைத்துக் கொண்டிருந்தனர்.

சயனக் கிருகங்களின் துப கலசங்களிலிருந்து கிளம்பிய அகிற்புகையின் நறுமணம் காற்றோடு இழைந்து எங்கும் பரவிக்கொண்டிருந்தது.

வானவன்மாதேவியின் பள்ளியறையில் விளக்கு ஒன்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மூன்று மஞ்சங்களில் இரண்டில் கொடிகள் துவண்டு நெளிந்து கிடப்பதுபோல் பகவதியும், விலாசினியும் படுத்துக் கொண்டிருந்தனர். நடுவாக இருந்த மூன்றாவது மஞ்சத்தில் வானவன்மாதேவி உட்கார்ந்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “தேவி! இப்படியே விடிகின்றவரை விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறீர்களா? களைப்புத்திர உறங்கினால் என்ன?” என்றாள் பகவதி.

“தூக்கம் வரவில்லையே, குழந்தாய்! நான் என்ன செய்வேன்? நீ தூங்கு!” என்று பதில் கூறினார் மகாராணி. விலாசினியோ படுத்த சில வினாடிகளுக்குள்ளேயே ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டு விட்டாள்.

பகவதி அதற்குமேல் மகாராணியை வற்புறுத்தும் உரிமை தனக்கு இல்லையென்று கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்தாள். நன்றாக உறங்கவுமில்லை, நன்றாக விழித்துக்கொண்டிருக்கவுமில்லை, இரண்டுக்கும் நடுப்பட்ட ஒரு நிலையில் அவள் படுக்கையில் கிடந்தாள்.

உறக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே ஒருவகைச் சாதாரண ஒய்வில் கிடந்த பகவதி சிறிது நேரத்துக்குப்பின் தற்செயலாகக் கண் விழித்தாள். விழித்துக் கொண்டவள் மகாராணியைக் காணவில்லை. மஞ்சத்தின்மேல் விரித்திருந்த