பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

11


ஆகியவற்றால் தவித்துக் கொண்டிருந்த வானவன் மாதேவியைத் துணிவான ஒரு முடிவுக்கு வரச் செய்த பெருமை அந்த மாலை நேரத்துக்குத்தான் உண்டு.

புறத்தாய நாட்டுக் கோட்டையில் வந்து தங்கியிருந்த வானவன் மாதேவி தென் பாண்டிக் குலதெய்வமாகிய குமரியன்னையைத் தொழுவதற்காக வந்திருந்தார். பறளியாற்றின் கரையிலிருந்து குமரித்துறை வரையிலும் அங்கங்கே வாழையும், தோரணமும், பாளையும் கட்டி மகாராணியாரின் வருகையில் தங்களுக்குள்ள ஆர்வத்தை அலங்கரித்துக் காட்டியிருந்தனர் நாஞ்சில் நாட்டுப் பெருமக்கள். கோட்டையிலிருந்து இருபுறமும் திறந்த அமைப்புள்ள பல்லக்கில் பயணம் செய்த தேவியின் கண்களுக்கு வழி நெடுகிலும் அன்பு நிறைந்த மக்களின் கூட்டத்தைக் கண்டு புதிய ஊக்கம் பிறந்தது. கணவன் மறைந்த சோகமும், மகன் ஒடிப்போன துன்பமும் நினைவின் அடிப்பள்ளத்தில் அமுங்கிவிட்டன.

‘புவன முழுதுடைய மகாராணி வானவன்மாதேவி வாழ்க!’ என்று நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்களின் பல்லாயிரம் பல்லாயிரம் குரல்கள் வாழ்த்தொலி செய்த போது, சோகத்தில் புழுங்கிய அரசியின் உள்ளம் பெருமித முற்றது.

‘எதிரிகள் கைப்படாமல் எஞ்சியிருக்கும் தென்பாண்டி நாட்டை என் உயிரின் இறுதி மூச்சு உள்ளவரையில் அன்னியர் வசமாக விடமாட்டேன்’ என்ற சபதத்தைத் தனக்குத் தானே செய்துகொண்டார், மகாராணி வானவன் மாதேவி. கன்னியாகுமரியை வானவன்மாதேவி அடைந்த போது ஏற்கெனவே வேறு சில முக்கியப் பிரமுகர்கள் அங்கு முன்பே வந்து காத்திருந்தனர். அப்படிக் காத்திருந்தவர்கள் எல்லோரும் நாஞ்சில் நாட்டு அரசியல், கலை, அமைதி ஆகிய பலப்பல துறைகளில் அக்கறையுள்ளவர்கள் ஆவர்.

கோட்டாற்றில் தங்கியிருக்கும் பாண்டியர்களின் தென்திசைப் பெரும் படைக்குத் தளபதியான