பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

129


வல்லாளதேவன் கன்னியாகுமரியில் தன் வீரர்களோடு இவர்களைத் தேடிக் கொண்டிருந்தான். நாராயணன் சேந்தன் சுசீந்திரம் தானுமாலய விண்ணகரகத்தில் மகா மண்டலேசுவரரைச் சந்தித்துக் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதற்காகக் குதிரைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். சுசீந்திரம் தானுமாலயம் பெருமாள் கோவிலில் தம்முடைய செல்வக் குமாரி குழல் மொழியுடனும் விழிஞத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த இளந்துறவியுடனும் நாராயணன் சேந்தனையும் அவன் கொண்டு வரப்போகும் செய்திகளையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். மகாராணி, அதங்கோட்டாசிரியர் முதலியவர்கள் குமரிக் கடற்கரையிலிருந்து புறத்தாய நாட்டுக் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

முன் சிறை அறக்கோட்டத்தில் முதல் யாமம் முடிவதற்குள்ளேயே அன்று அசாதாரணமான அமைதி நிலவியது. பெளர்ணமி தினமாகையினால் சத்திரத்தில் வந்து தங்கியிருந்த யாத்திரீகர்களில் பெரும்பாலோர் கன்னியாகுமரிக்கும் சுசீந்திரத்துக்குமாகத் தரிசனத்துக்குச் சென்று விட்டனர். யாத்திரை வந்தவர்கள் பெளர்ணமி என்பதற்காக மட்டும் அன்று கன்னியாகுமரி செல்லவில்லை. அன்றைக்குச் சென்றால் உலகமாதேவியாகிய கன்னியாகுமரி அம்மனின் தரிசனத்தோடு பாண்டிமாதேவியாகிய மகாராணியின் தரிசனமும் அங்கேயே கிடைக்கும் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மகாராணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் கட்டுக் கடங்காமல் இருந்ததால் அவர்கள் அண்டராதித்த வைணவனை வழிகாட்டியாகத் துணைக்கு அழைத்துக்கொண்டு கிளம்பினர்.

சத்திரத்தைப் பார்த்துக்கொள்வதற்கு வேறு யாராவது ஆள் இருந்தால் கோதை நாச்சியாரிடம் சொல்லி வற்புறுத்தி அவளையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போயிருப்பான் அண்டராதித்தன். ஆனால் அதற்கு வழியில்லாமல் இருந்தது நிலைமை யாத்ரீகர்களும், தானும், தரிசனத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும்போது சாப்பிடுவதற்கு உணவு தயாரித்து வைத்திருக்க வேண்டும். கோதையோ, தானோ இருந்தால்தான் அதை நிறைவேற்ற முடியும்.